ஷா ஆலம், மே 24 - நேற்று கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள செந்தோசா மண்டபத்தில் நடைபெற்ற 'இன்-சிட்டு' (In-Situ) வளர்ப்பு நாய்களுக்கான உரிமம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக 35 வளர்ப்பு நாய்களுக்கு கிள்ளான் அரச மாநகராட்சி மன்றம் (MBDK) வெற்றிகரமாக உரிமம் வழங்கியுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இத்திட்டம் நடைபெற்றதாக எம்.பி.டி.கே தனது முகநூல் (Facebook) பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிள்ளானில் நாய்களைச் செல்லப்பிராணிகளாக வளர்க்கும் சமூகத்தினரை அணுகுவதற்காக இந்தச் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
"2007ஆம் ஆண்டு நாய் உரிமம் மற்றும் நாய் இனப்பெருக்க மைய துணைச் சட்டங்களின் (MPK) விதிமுறைகளுக்கு ஏற்ப, நாய்களுக்கு உரிமம் பெறுவது அவற்றின் உரிமையாளர்களின் பொறுப்பாகும்," என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உரிமம் வழங்குவதோடு மட்டுமின்றி, தனியார் நிறுவனமான சர்வ்-யூ வெட்டரினரி கிளினிக் (Serv-U Veterinary Clinic) உடன் இணைந்து 11 நாய்களுக்குத் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
"இத்திட்டம் மிகவும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. இதன் வழி மொத்தம் ரி.ம 1,190 வசூலிக்கப்பட்டுள்ளது," எனவும் அதே அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் வசதிக்காக அபராதங்களைச் சரிபார்க்கும் கவுண்டர் ஒன்றையும் மாநகராட்சி மன்றம் திறந்தது.
அதில் போக்குவரத்து, வாகன நிறுத்துமிட அபராதம் போன்ற பல்வேறு குற்றங்களுக்கான அபராதங்களைச் செலுத்த சிறப்புத் தள்ளுபடியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.








