தாமான் தெலுக் புலாய் வெள்ளத் தடுப்புத் திட்டம்: மெத்தனமாக இருந்த ஒப்பந்தக்காரர் நீக்கம்

14 மே 2026, 9:03 AM
தாமான் தெலுக் புலாய் வெள்ளத் தடுப்புத் திட்டம்: மெத்தனமாக இருந்த ஒப்பந்தக்காரர் நீக்கம்

ஷா ஆலம், மே 14: கிள்ளான், தாமான் தெலுக் புலாய் (Taman Teluk Pulai) பகுதியில் நிலவி வரும் திடீர் வெள்ளப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வெள்ளத் தடுப்புத் திட்டப் பணிகளை, எவ்வித சமரசமுமின்றி தரமான முறையில் முடிப்பதில் கிள்ளான் அரச மாநகராட்சி (எம்பிடிகே) உறுதியாக உள்ளது.

இத்திட்டத்தின் தற்போதைய ஒப்பந்தக்காரர் பணியை முடிப்பதில் காட்டிய காலதாமதம் மற்றும் குளறுபடிகள் காரணமாக, அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்த எம்பிடிகே நிறுவனத் தகவல் தொடர்பு இயக்குநர் நோர்ஃபிசா மஹ்ஃபிஸ், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையத் தவறிய ஒப்பந்தக்காரரின் சேவையை முடிவுக்குக் கொண்டு வரும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

"திட்டத்தின் உண்மையான முன்னேற்றம் தற்போது வெறும் 8 விழுக்காடு மட்டுமே எட்டியுள்ளது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கோ 47 விழுக்காடாகும். இதற்காக அந்த ஒப்பந்தக்காரருக்கு ஏற்கனவே இரண்டாவது எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

முறையாக ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக இந்த விவகாரம் ஒப்பந்த ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்திற்கு (Panel Penyelarasan Kontrak) கொண்டு செல்லப்படும்," என்று அவர் மீடியா சிலாங்கூர் ஊடகத்திடம் கூறினார்.

இந்த நடவடிக்கையின் மூலம், தகுதியான புதிய ஒப்பந்தக்காரர் ஒருவரை உடனடியாக நியமித்து, திட்டத்தின் நோக்கத்தை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவேற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. புதிய ஒப்பந்தக்காரரை நியமிக்கும் இந்த மாற்றுக் காலத்தில், பொதுமக்கள் பொறுமை காக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில், கட்டுமானப் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யுமாறு தொழில்நுட்பப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

"கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டமைப்புகள் பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. இதனை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம்.

புதிய ஒப்பந்தக்காரர் பணியைத் தொடங்கும் வரை, அங்குள்ள தடைகளை அகற்றி சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன," என நோர்ஃபிசா மேலும் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.