2026-ஆம் ஆண்டு தாய்மார் தினக் கொண்டாட்டத்தைக் கிள்ளான் அரச மாநகர் மன்றம் சிறப்பாக நடத்தியது

7 மே 2026, 5:03 AM
2026-ஆம் ஆண்டு தாய்மார் தினக் கொண்டாட்டத்தைக் கிள்ளான் அரச மாநகர் மன்றம் சிறப்பாக நடத்தியது

ஷா ஆலம், மே 7: குடும்பத்தின் அச்சாணியாகவும், வருங்காலத் தலைமுறையை உருவாக்குபவர்களாகவும் திகழும் தாய்மார்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) அண்மையில் '2026-ஆம் ஆண்டு தாய்மார் தினக்' கொண்டாட்டத்தை மிகச் சிறப்பாக நடத்தியது.

கிள்ளான் மாநகரச் சபையின் ஹம்சா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேன் தலைமை தாங்கினார்.

அவருடன் அவரது மனைவி டத்தின் ஜமாலியா அப்துல் அஜிஸ் மற்றும் பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குவா பெங் பெய் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ அப்துல் ஹமித் ஹுசேன், இத்தகைய கொண்டாட்டங்கள் வெறும் ஆண்டு விழாவாக மட்டும் அமைந்துவிடாமல், வருங்காலத் தூண்களாகத் திகழும் பிள்ளைகளின் நற்பண்புகளைச் செதுக்கும் தாய்மார்களின் அளப்பரிய பங்களிப்பை எண்ணிப் பார்க்கும் ஒரு களமாக அமைய வேண்டும் என்றார்.

"கருவறையில் சுமந்தது முதல், எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் ஒரு தாயின் தியாகத்திற்கு ஈடாக உலகில் எதுவுமே இல்லை.

ஒவ்வொரு வலிமையான குடும்பத்தின் பின்னணியிலும், சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஒரு தாயின் உறுதி ஒளிந்திருக்கிறது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, அறிவார்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது. இதில் முன்னாள் தூதர் டத்தோ லிம் ஜுவாய் ஜின், சிலாங்கூர் புஸ்பானிதா (Puspanita) தலைவி டத்தின் ஷர்மிளா யாஹ்யா மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ நிபுணர் டாக்டர் ரோவினா ஜான் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து பேசிய மாநகரத் தந்தை, குறிப்பாக இளைஞர்கள் தங்களின் பெற்றோர்களை, அதிலும் குறிப்பாக முதிய வயதை எட்டியுள்ள தாய்மார்களை அன்போடும் கண்ணியத்தோடும் அரவணைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"அவர்கள் உயிரோடு இருக்கும் வரை ஒவ்வொரு நாளையும் தாய்மார் தினமாகக் கருதி அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மலை அளவு தங்கத்தைக் கொடுத்தாலும் அவர்களின் தியாகத்திற்கு ஈடாகாது," என்று அவர் வலியுறுத்தினார்.

கிள்ளான் மாநகரச் சபை உறுப்பினர்களான நியான் யோக் மூய், கான் இயூ எங் மற்றும் கிம் கோக் தாய் ஆகியோரின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இவ்விழாவில், கிள்ளான் மாவட்ட தேசிய ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புத் துறை மற்றும் அமைதி நீதிபதிகள் (Jaksa Pendamai) இணைந்து நடத்திய சமூக மத்தியஸ்தர் தொடர்பான விளக்கவுரையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.