ஷா ஆலம், மே 18 – கிள்ளான், பண்டாமாரான் ஜெயாவில் உள்ள வணிக வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட தூய்மை சோதனை நடவடிக்கையின் போது, விதிமுறைகளை முறைப்படி பின்பற்றத் தவறிய ஏழு வணிக வளாகங்களுக்குக் கிள்ளான் அரச மாநகராட்சி (எம்பிடிகே) மொத்தம் ஒன்பது அபராத நோட்டிஸ்களை வழங்கியுள்ளது.
அம்மாநகராட்சியின் சுற்றுச்சூழல் சேவைத் துறையால் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள வணிக வளாகங்களின் தூய்மை நிலை மற்றும் கழிவு மேலாண்மை முறைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யும் நோக்கில் மொத்தம் 61 வளாகங்களில் இப்பரிசோதனை நடத்தப்பட்டதாகக் கிள்ளான் அரச மாநகராட்சி தெரிவித்தது.
இந்தச் சோதனையின் முடிவில், பிடிபட்ட அந்த ஏழு வணிக வளாகங்களும் '2007 வணிக வளாகப் பணியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கான நகராட்சி துணைச் சட்டத்தின்' (UUK PPPS MPK 2007) கீழ் பல்வேறு தூய்மைக் குறைபாடு குற்றங்களைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
இதில் ஆறு அபராதங்கள் 'UUK 11' விதியின் கீழ் வழங்கப்பட்ட வேளையில், மேலும் இரண்டு அபராதங்கள் 'UUK 5' மற்றும் 'UUK 11' விதிகளின் கீழ் உள்ள குற்றங்களுக்காக விதிக்கப்பட்டன.
எஞ்சிய ஓர் அபராதம் 'UUK 6' மற்றும் 'UUK 11' விதிகளின் கீழ் செய்யப்பட்ட குற்றத்திற்காக அந்த வணிகங்களுக்கு விதிக்கப்பட்டதாக மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து வணிகர்களுக்குக் கடுமையான நினைவூட்டல் ஒன்றை விடுத்துள்ள கிள்ளான் அரச மாநகராட்சி, வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் தங்களின் கடைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் தூய்மையை மிகச் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அதோடு, மாநகராட்சி நிர்ணயித்துள்ள விவரக்குறிப்புகளின்படி (specifications), ஒவ்வொரு வளாகமும் தங்களின் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யக் குறைந்தபட்சம் 240 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய குப்பைத் தொட்டிகளைத் தங்களின் கடைகளில் கட்டாயம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் வசதியை எப்போதும் பாதுகாக்கும் நோக்கில், வணிக வளாகங்களின் தூய்மைத் தரம் எப்போதும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்யக் கிள்ளான் அரச மாநகராட்சி என்றும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








