ஷா ஆலம், மே 22: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல்களின் காரணமாக உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், மலேசியாவின் எரிசக்தி விநியோகம் தற்போதைக்குத் தட்டுப்பாடின்றி போதுமான அளவில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதிருக்கும் எரிசக்தி இருப்பு வருகின்ற ஜூலை மாதம் வரை மட்டுமே போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், வெளிநாடுகளில் இருந்து எரிசக்தியைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு மாற்று முயற்சிகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வருவதாகப் 'பெரித்தா ஹரியான்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று வாங்சா மாஜுவில் உள்ள அல்-முத்தாகின் மசூதியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர், நாட்டின் எரிசக்தி விநியோகம் போதுமானதாக இருக்கும் என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டார்.
முன்னதாக, உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில், நாட்டின் எரிசக்தி விநியோகத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகத் துணைப் பிரதமரும், எரிசக்தி மாற்றம் மற்றும் நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஃபாடிலா யூசுப் தெரிவித்திருந்தார்.
நாட்டின் தற்போதைய எரிசக்தி பாதுகாப்பு நிலைமை ஜூலை வரை மட்டுமே நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதால், வெளிநாட்டு மூலங்களிலிருந்து எரிசக்தியைத் திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மக்களுக்கான எரிசக்தி பாதுகாப்பினை எவ்வித தடையுமின்றி முழுமையாக உறுதி செய்வதற்காக, தேசிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ் (PETRONAS), ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் எரிசக்தி விநியோக மூலங்களைப் பெற்று வருவதாகத் துணைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.








