ஜோகூர் பாரு, மே 18 – பி-ஹெய்லிங் (p-hailing) ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் ‘பூடி மடாணி ரோன்95’ (BUDI95) பெட்ரோல் மானிய வரம்பை மாதத்திற்கு 250 லிட்டராக உயர்த்துவது குறித்தப் பரிந்துரை, தேசியப் பொருளாதாரச் செயல்மன்றக் (MTEN) கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
இவ்விவகாரம் குறித்துப் பேசிய பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பி-ஹெய்லிங் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இக்கோரிக்கை மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்படும் என்றார்.
தற்போதைய நிலவரப்படி, பொதுமக்களுக்கான மாதாந்திரப் பயன்பாட்டு அளவைப் போலவே பி-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கும் 200 லிட்டர் மட்டுமே மானிய வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது பற்றாக்குறையாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"செவ்வாய்க்கிழமை (நாளை) நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை நான் விவாதத்திற்குக் கொண்டு வருவேன். ஏனென்றால் தற்போது அவர்களுக்கும் நம்மைப் போலவே வெறும் 200 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.
எனவே, இதனை இன்னும் 50 லிட்டர் உயர்த்தி, குறைந்தபட்சம் 250 லிட்டராக மாற்றுவதற்கான வழியைக் காணுமாறு தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சிலிடம் நான் வலியுறுத்துவேன்," என்று பிரதமர் கூறினார்.
நேற்று தெப்ராவ், தாமான் டேசா முத்தியாரா மக்கள் வீட்டுவசதித் திட்ட (PPR) மண்டபத்தில் ஜோகூர் மாநில மக்களுடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் சில பி-ஹெய்லிங் ஓட்டுநர்களை நேரில் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த பிறகே, இந்த மாற்றுப் பரிந்துரையைத் தாமே நேரடியாக முன்மொழிந்ததாக அன்வார் மேலும் விளக்கினார்.
மற்றொரு முக்கிய அறிவிப்பாக, தாமான் டேசா முத்தியாரா பிபிஆர் குடியிருப்பாளர்களின் குழு முன்வைத்த பல்வேறு புகார்கள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்த பிரதமர், அங்குள்ள உள்கட்டமைப்புகளை அவசரமாகப் பழுதுபார்ப்பதற்காக 1 மில்லியன் ரிங்கிட் உடனடி நிதியை அங்கேயே அறிவித்தார்.
"முதற்கட்டமாக நான் 1 மில்லியன் ரிங்கிட் நிதிக்கு உடனடியாக ஒப்புதல் வழங்குகிறேன். இதன் மூலம் உடைந்த கதவுகள் உள்ளிட்ட மிகவும் அவசரமான மற்றும் அத்தியாவசியமான பழுதுபார்ப்புப் பணிகள் உடனடியாகச் செய்து முடிக்கப்படும்," என்று அவர் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்தார்.
அதுமட்டுமன்றி, அதே பகுதியில் உள்ள புக்கிட் முத்தியாரா பள்ளியில் (Sekolah Bukit Mutiara) செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் கழிப்பறைகளையும் எவ்விதத் தாமதமும் இன்றி உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை, உலக நாடுகளுடனான சிறந்த தூதரக உறவுகள் மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாகவே, அரசாங்கத்தால் மக்களுக்கு இத்தகைய உள்கட்டமைப்பு உதவிகளை வழங்க முடிகிறது என்றார் பிரதமர்.
மேலும், இதே காரணத்தினால்தான் உலகிலேயே மிகக் குறைந்த விலையாகக் கருதப்படும் 1 ரிங்கிட் 99 சென் (RM1.99) என்ற மானிய விலையிலேயே 'பூடி95' திட்டத்தின் கீழ் ரோன்95 பெட்ரோல் விலையை மலேசியாவில் தொடர்ந்து தக்க வைக்க முடிகிறது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் பெருமிதத்துடன் குறிப்பிட்டுக் கூறினார்.








