கோலாலம்பூர், மே 12: மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு (MITRA) வழங்கப்பட்டு வந்த ஆண்டு ஒதுக்கீட்டை 100 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்த அரசாங்கம் எடுத்துள்ள முடிவு, இந்திய சமூகத்தினரிடையே, குறிப்பாகப் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியக் கூட்டு சுகாதார சங்கத்தின் (Malaysians Joint Health Association) செயலாளர் கார்த்திக் பெலையப்பன் இது குறித்துக் கூறுகையில், இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு நாடு தழுவிய அளவில் இந்திய சமூகத்தின் கல்வி, மனித மூலதன மேம்பாடு, திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மற்றும் நலத்திட்டங்களுக்குப் பெரும் நன்மைகளைத் தரும் என்று தெரிவித்தார்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியை இந்த நடவடிக்கை பிரதிபலிப்பதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், பாலிங் மாவட்ட இந்தியர் நலன் மற்றும் சீர்திருத்தச் சங்கத்தின் தலைவர் எஸ். சந்தர் சந்துரு, இந்த நிதி அதிகரிப்பானது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோர் இந்திய சமூகத்தின் மேம்பாட்டுத் திட்டங்களை வலுப்படுத்துவதில் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றில் இந்திய சமூகத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிரமாக இருப்பதை இது உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.
நெகிரி செம்பிலான் மனித மேம்பாட்டுச் சங்கத்தின் செயலாளர் டேனியல் செல்வராஜர், இந்த கூடுதல் நிதியானது இந்திய இளைஞர்களிடையே மனித மூலதன வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று வர்ணித்தார்.
இந்த ஒதுக்கீடு இந்திய சமூகத்தினர் தங்கள் வாழ்வாதாரத்தையும் தரத்தையும் உயர்த்திக்கொள்ள அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று, மித்ரா அமைப்பின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், அந்த அமைப்பிற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.
கல்வி, பயிற்சி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு தேவைப்படும் இந்திய சமூகக் குழுக்களை இலக்காகக் கொண்டு மித்ரா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்த பின்னரே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.








