ஷா ஆலம், மே 12: மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவுக்கு (MITRA) 150 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது, இந்நாட்டு இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக மடாணி அரசாங்கம் கொண்டுள்ள வலுவான அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
மித்ராவுக்கான நிதியை உயர்த்துவதாக அறிவித்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அவர் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இது குறித்துக் கருத்துரைத்த குணராஜ், இந்தியச் சமூகத்தைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று வர்ணித்தார்.
மித்ரா அமைப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்தும், அதற்கு முன்னதாக 'செடிக்' (SEDIC) என்று அழைக்கப்பட்ட காலத்திலிருந்தும், கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக அதன் ஆண்டு ஒதுக்கீடு 100 மில்லியன் ரிங்கிட் என்ற அளவிலேயே நீடித்து வந்தது. தற்போது முதல்முறையாக இந்த நிதி உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 50 மில்லியன் ரிங்கிட் நிதி, மலேசிய இந்தியர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவதில் மடாணி அரசாங்கம் எப்போதும் அக்கறையுடனும் உறுதியுடனும் செயல்படுவதைச் சான்றளிக்கின்றது.
இந்த நிதி அதிகரிப்பின் மூலம் கல்வி, திறன் பயிற்சி, தொழில்முனைவோர் மேம்பாடு, சமூக நலன், இளைஞர் மற்றும் மகளிர் மேம்பாடு என ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை இன்னும் விரிவான முறையில் செயல்படுத்த முடியும் என்று குணராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளையில், இந்தியச் சமூகத்தின் குரலையும் தேவைகளையும் அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்குத் தொடர்ந்து கொண்டு சென்ற மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனுக்கும் அவர் தனது நன்றியைப் பதிவு செய்தார்.
பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியச் சமூகம் தொடர்ந்து அதிக வாய்ப்புகளையும், புதிய நம்பிக்கையையும் பெறும் என்றும், அனைவரும் ஒற்றுமையுடனும் நம்பிக்கையுடனும் முன்னேறிச் செல்ல வேண்டிய தருணம் இது என்றும் அவர் கூறினார்.








