பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - பாப்பாராய்டு வலியுறுத்தல்

7 மே 2026, 2:44 AM
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - பாப்பாராய்டு வலியுறுத்தல்

ஷா ஆலம், மே 7: பள்ளி மாணவர்களின் உயிரைப் பறிக்கும் கோர விபத்துகள் மீண்டும் நிகழாமல் இருக்க, பள்ளி வளாகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக பலப்படுத்த வேண்டும் என்று பந்திங் சட்டமன்ற உறுப்பினர் பாப்பாராய்டு வீராமன் வலியுறுத்தியுள்ளார்.

மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர், சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

"பள்ளி வளாகம் என்பது பிள்ளைகள் கல்வி பயிலும் மிக பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டுமே தவிர, சாலைப் பயனாளிகளின் அலட்சியத்தால் உயிரைப் பறிக்கும் இடமாக மாறக்கூடாது," என்று அவர் வேதனை தெரிவித்தார்.

சாலை விதிகளை மதிக்காமல் அவசர நிலையில் வாகனங்களைச் செலுத்துவது இத்தகைய துயரங்களுக்குக் காரணமாக அமைகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பள்ளிப் பகுதிகளில் அபாயகரமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று 'மீடியா சிலாங்கூர்' ஊடகத்திடம் பேசியபோது தெரிவித்தார்.

சமீபகாலமாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளிகள், வாகன ஓட்டிகள் பள்ளிப் பகுதிகளில் சிக்னல்களை மதிக்காமலும், அதிவேகமாகவும் செல்வதைக் காட்டுவது மிகுந்த கவலையளிப்பதாக அவர் கூறினார். குறிப்பாக, பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பெற்றோர்களின் வாகனங்கள் மற்றும் பள்ளிப் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் மாணவர்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

எனவே, பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG), உள்ளூர் அதிகாரத் தரப்பு மற்றும் காவல்துறை ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளிப் பகுதிகளில் போக்குவரத்துச் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த மே 4-ஆம் தேதி, ஜோகூர், பாரிட் சூலோங்கில் உள்ள ஸ்ரீ மைமோன் தேசியப் பள்ளியின் வாசலில் 8 வயதுடைய நூர் ஐனி உமைரா எனும் இரண்டாம் ஆண்டு மாணவி, வேன் மோதியதில் உயிரிழந்தார்.

பள்ளி முடிந்து வெளியே வந்த அந்த மாணவி மீது, பொருட்களை ஏற்றி வந்த வேன் ஒன்று எதிர்பாராத விதமாக மோதியதில் இந்தத் துயரம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சம்பவங்கள் பள்ளிப் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதாகவும், இதற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பாப்பாராய்டு வீராமன் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.