சிறுவர் & இணையப் பாதுகாப்பு: எஸ்கேஎம்எம் (SKMM) 37 கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியது

27 மே 2026, 3:52 AM
சிறுவர் & இணையப் பாதுகாப்பு: எஸ்கேஎம்எம் (SKMM) 37 கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தியது

ஷா ஆலம், மே 27: கடந்த ஆறு மாதங்களில் சமூக ஊடகத் தளங்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் 37 கலந்தாய்வுக் கூட்டங்களை (Sesi Libat Urus) மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM) நடத்தியுள்ளது.

இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் தீங்கிழைக்கும் உள்ளடக்கங்கள் அல்லது தொடர்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது குறித்து விவாதிப்பதற்காகவே இக்கூட்டங்கள் நடத்தப்பட்டதாக எஸ்கேஎம்எம் கார்ப்பரேட் தகவல் தொடர்புப் பிரிவு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அமர்வுகள், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்த '2025 இணையப் பாதுகாப்புச் சட்டத்தை' (ONSA) உருவாக்குவதற்கான ஓர் ஆயத்த நடவடிக்கையாகும் என்றும் அந்த அமைப்பு விவரித்துள்ளது.

"இணையத்தில் பரவும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள், இணைய மோசடிகள் (Scams) மற்றும் இணையப் பகடிவதை (Buli Siber) போன்ற தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களை முன்கூட்டியே தடுத்து, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தக் கலந்தாய்வு கவனம் செலுத்தியது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"அதோடு, தடுப்பு நடவடிக்கைகள், பயனர்களின் வயதை உறுதிப்படுத்துதல், பெற்றோரின் கண்காணிப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் மலேசியாவில் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16 ஆகக் கட்டுப்படுத்துவதை அமலாக்குவது குறித்தும் இக்கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

இளைஞர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அவர்களின் வயதிற்குப் பொருத்தமான இணைய அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். மேலும், பெற்றோரின் கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் சமூக ஊடகத் தளங்களின் பொறுப்பான வடிவமைப்பு ஆகியவற்றிற்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது," என்று எஸ்கேஎம்எம் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவை வழங்கும் தளங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுவதை உறுதி செய்யவும், சிறுவர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இணையக் குற்றங்களுக்குத் தங்களின் தளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்துடன் (சட்டம் 588) இணைந்து இந்த ONSA சட்டம் முக்கியப் பங்காற்றுகிறது.

இதே அறிக்கையின்படி, ONSA சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பாக 6 அமர்வுகளும், அந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் எஞ்சிய 31 அமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

மேலும், எஸ்கேஎம்எம் அதிகாரிகள், தகவல் தொடர்பு அமைச்சின் பிரதிநிதிகள், காவல்துறையினர் மற்றும் தேசிய இணையப் பாதுகாப்பு முகமை (NACSA) ஆகியோருடன் இணைந்து சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமான பயணம் மேற்கொண்டு அங்குத் தொழில்நுட்பக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

"இது தவிர, பயனர்களின் வயதை உறுதிப்படுத்தும் விதிகளுக்கு இணங்குவதைச் சீரமைக்கவும், அதற்கான தயார் நிலையை உறுதிப்படுத்தவும் சமூக ஊடக சேவை நிறுவனங்களுடன் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு அமர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மலேசியாவின் டிஜிட்டல் தளங்கள் பாதுகாப்பான, பொறுப்பான மற்றும் இணையக் குற்றங்கள் இல்லாத இடமாக மாறுவதை உறுதி செய்வதற்காக, இந்த 'ரெகுலேட்டரி சேண்ட்பாக்ஸ்' (Regulatory Sandbox) வழிமுறையின் கீழ் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகள் மிகவும் முக்கியமானவை," என்றும் அந்த அறிக்கை விளக்கியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.