சிறார்களுக்கு எதிரான இணையவழி பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

22 மே 2026, 8:07 AM
சிறார்களுக்கு எதிரான இணையவழி பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

புத்ராஜெயா, மே 22: நாட்டிற்குள் சிறார்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் இணையவழி பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகளுக்கு இணையத்தில் கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக 'இணையப் பாதுகாப்புச் சட்டம் 2025' (ONSA)-இல் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தற்பொழுது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குழந்தைகளின் இணையப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது என்றும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களைப் பதிவு செய்வதற்கான தரவுத்தளம் (Registry) ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

எனினும், பல்வேறு அமைச்சுகளுடனும் முகமைகளுடனும் இது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்ட போதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

'குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கையின் கீழ் மலேசியாவின் பங்களிப்பு' எனும் நிகழ்வைத் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இணையத்தில் சிறார்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவது மற்றும் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் (CSAM) சேகரிக்கப்படுவது குறித்துப் பெரும் கவலை எழுந்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடத்தப்பட்ட நான்கு முக்கிய ரகசியச் சோதனைகளின் மூலமாக, சிறார் பாலியல் வன்கொடுமையோடு தொடர்புடைய சுமார் 14.7 லட்சத்திற்கும் (1.47 மில்லியன்) அதிகமான டிஜிட்டல் ஆவணக் கோப்புகள் கண்டறியப்பட்டுள்ளது குறித்தும், இத்தகைய குற்றங்களின் அபாயகரமான வளர்ச்சி குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அமைச்சர் நான்சி சுக்ரி இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.