ஆண்டுதோறும் 14,000 குழந்தைகளின் பிறப்புகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன: அமைச்சர் சைஃபுடின்

15 மே 2026, 8:49 AM
ஆண்டுதோறும் 14,000 குழந்தைகளின் பிறப்புகள் பதிவு செய்யப்படாமல் உள்ளன: அமைச்சர் சைஃபுடின்

கோலாலம்பூர், மே 15 – மலேசியாவில் ஆண்டுதோறும் சுமார் 13,000 முதல் 14,000 வரையிலான குழந்தைகளின் பிறப்புகள் பதிவு செய்யப்படாமல் இருக்கும் சவாலை உள்நாட்டு அமைச்சு (KDN) இன்னும் எதிர்கொண்டு வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்காலத்தில் கல்வி மற்றும் மருத்துவப் பலன்களைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திப்பதைத் தவிர்க்க இந்தச் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று லுனாஸில் உள்ள அவரது மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற நற்பண்புகள் மேம்பாட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு மட்டும் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாமல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சுமார் 13,000 குழந்தைகளின் ஆவணப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு வழங்கிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், உள்நாட்டு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்பின் மூலம் வெறும் ஆறு மாத காலத்திற்குள் அந்த ஆவணப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நீண்ட காலப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, தேசியப் பதிவுத் துறை (JPN) பல்வேறு காரணங்களால் தாமதமாகும் பிறப்புப் பதிவுகளை விரைந்து முடிக்கத் தீவிரமாக உதவி வருகிறது.

பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் தாங்களாகவே முன்வந்து தேசியப் பதிவுத் துறை அலுவலகத்திற்கு வருவதற்காகக் காத்திருக்காமல், கிராமப்புறங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து ஆவணங்களை வழங்குவதற்காகப் பிரத்யேக 'அவுட்ரீச்' (Outreach) திட்டங்களையும் அந்தத் துறை நடத்தி வருவதாக அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் கூறினார்.

இத்தகைய நேரடி அணுகுமுறைகளின் மூலம் முறையான அடையாள ஆவணங்கள் இல்லாத குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியும் என்றும், தொடக்கத்திலேயே இதனைச் சரி செய்யாவிட்டால் அதுவே அவர்களின் எதிர்காலப் பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்பாக, தற்போதைய சூழலில் அரசாங்கம் வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்குக் 'மைகார்ட்' (MyKad) அடையாள அட்டை அவசியம் ஆகும்.

ஆவணங்கள் இல்லாத குழந்தைகளுக்குப் பள்ளி சேர்க்கை, மருத்துவமனைச் செலவுகள் மற்றும் பல வாழ்வாதார வழிகள் முடங்கிவிடும் என்பதால், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு இப்பிரச்சனையை உடனடியாகத் தீர்க்க உள்நாட்டு அமைச்சு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்று அவர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.