புதிய மைக்காட் ஜூன் 1 முதல் அறிமுகம்: பழைய மைக்காட் வைத்திருப்பவர்கள் உடனடியாகப் புதிய அட்டைக்கு மாற வேண்டிய கட்டாயம் இல்லை

8 மே 2026, 9:23 AM
புதிய மைக்காட் ஜூன் 1 முதல் அறிமுகம்: பழைய மைக்காட் வைத்திருப்பவர்கள் உடனடியாகப் புதிய அட்டைக்கு மாற வேண்டிய கட்டாயம் இல்லை

கோலாலம்பூர், மே 8 - மலேசியாவில் எதிர்வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய மைக்காட் (MyKad) அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

எனினும், தற்போது பழைய மைக்காட் வைத்திருப்பவர்கள் அனைவரும் உடனடியாகப் புதிய அட்டைக்கு மாற வேண்டிய கட்டாயம் இல்லை என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது குறித்து ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தின் (BSI) சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்தைப் (CIQ) பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்கள் அவசரப்பட்டு தேசியப் பதிவுத் துறை (JPN) அலுவலகங்களில் குவிய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அடையாள அட்டை வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். ஆனால், புதிய அட்டை அறிமுகமாகும் ஜூன் 1-ஆம் தேதியன்றே அனைவரும் அதனை மாற்ற வேண்டும் என்று சட்டம் கூறவில்லை என அவர் விளக்கினார்.

12 வயதை எட்டும் ஒவ்வொரு குடிமகனும் மைக்காட் பெறுவது கட்டாயம் என்ற நிலையில், தற்போது மலேசியாவில் 2 கோடிக்கும் அதிகமானோர் அடையாள அட்டையைப் பெற்றுள்ளனர்.

பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் மெதுவாகப் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசியப் பதிவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ பத்ருல் ஹிஷாம் அலியாஸ் முன்னதாக வெளியிட்ட தகவலின்படி, புதிய மைக்காட்டில் 53 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். தற்போதுள்ள மைக்காட்டில் 23 அம்சங்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலோகிராம், மைக்ரோ டெக்ஸ்ட், அமலாக்கப் பணிகளுக்கான க்யூஆர் (QR) குறியீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட குறியாக்கத் திறன் கொண்ட சிப் (Chip) போன்றவை இந்தப் புதிய அட்டையின் சிறப்பம்சங்களாகும்.

மைக்காட் தவிர, மைபோகா (MyPoCA) மற்றும் மைதெந்தெரா (MyTentera) ஆகிய அடையாள அட்டைகளும் அடுத்த மாதம் முதல் புதிய வடிவில் அறிமுகமாகவுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.