கோலாலம்பூர், மே 24: இணையவழியிலான பாலியல் தொல்லைகள் (Online Sexual Harassment) சமூகத்தில் நாளுக்கு நாள் மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களுக்கான மின்னியல் ஆதாரங்களை (Digital Evidence) உடனடியாகச் சேமித்து வைக்க வேண்டும் என்று சிலாங்கூர் வழக்கறிஞர் கழகத்தின் முன்னாள் தலைவர் கோகிலா வாணி வடிவேலு வலியுறுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் இதர டிஜிட்டல் தளங்களின் அதிவேக வளர்ச்சியானது, ஆபாசமான செய்திகளை அனுப்புவது, இணையவழி பின்தொடர்தல் (Cyberstalking), அனுமதியின்றி ஆபாசப் படங்களை அனுப்புவது மற்றும் பாலியல் ரீதியாக மிரட்டுவது போன்ற புதிய வடிவிலான பாலியல் தொல்லைகளுக்கு வழிவகுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"பாலியல் தொல்லைகளுக்கு எதிரான துணிச்சல்" (Courage to Break the Silence) எனும் தலைப்பில், இன்று இரவு 7.30 மணிக்கு பெர்னாமா தொலைக்காட்சியில் (Bernama TV) ஒளிபரப்பாகவிருக்கும் 'பார்வை' (Paarvai) எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இக்கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
மின்னியல் தளங்களில் உள்ள தகவல்கள் அல்லது ஆதாரங்கள் மிக எளிதாக அழிக்கப்படவோ அல்லது மாற்றியமைக்கப்படவோ வாய்ப்புகள் அதிகம் என்பதால், எவ்வளவு சீக்கிரம் ஆதாரங்கள் சேகரிக்கப்படுகிறதோ, அவ்வளவு தூரம் சட்ட ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நியாயத்தை நிலைநாட்டுவது வலுப்பெறும் என்று அவர் விவரித்தார்.
பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்குவதோடு, ஸ்கிரீன்ஷாட்டுகள் (Screenshots), வாட்ஸ்அப் உரையாடல்கள், மின்னஞ்சல்கள், குரல் பதிவுகள், சிசிடிவி காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்கள் போன்ற மின்னியல் ஆதாரங்களைச் சேமிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நீதிமன்றத்தில் இத்தகைய மின்னணு ஆதாரங்களின் உண்மைத்தன்மையை நிரூபிக்க முடிந்தால், அவை சட்டப்பூர்வமான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மலேசியாவின் 2022-ஆம் ஆண்டு பாலியல் தொல்லை எதிர்ப்புச் சட்டத்தின்படி (Anti-Sexual Harassment Act 2022), வாய்மொழி மூலமாகவோ, சைகைகள் மூலமாகவோ, காட்சிப் பூர்வமாகவோ அல்லது உடல் ரீதியாகவோ வெளிப்படுத்தப்படும் தேவையற்ற எந்தவொரு பாலியல் நடத்தையும் பாலியல் தொல்லையாகவே வரையறுக்கப்படுகிறது.
தற்போதைய சட்டக் கட்டமைப்பு இத்தகைய தொல்லைகள் டிஜிட்டல் தளங்களிலும் நிகழக்கூடும் என்பதை அங்கீகரித்துள்ளது. அதற்கேற்ப, மலேசிய சட்டத்தின் கீழ் இணையவழி பாலியல் தொல்லைகள் மிகத் தெளிவாகக் குற்றமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் ஆபாசமான, அச்சுறுத்தும் மற்றும் அநாகரிகமான தொடர்புகளுக்கு எதிராக 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-இன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கோகிலா வாணி தெரிவித்தார்.
ஒருவேளை தங்களுக்கு நேர்ந்த சம்பவத்திற்கு நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கத் தயங்கக் கூடாது என்றும்; சாட்சிகளின் வாக்குமூலங்கள், சூழ்நிலைகள், குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிவகை முறைகள் மற்றும் வாக்குமூலங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு நீதிமன்றங்கள் வழக்குகளை ஆராயும் என்றும் அவர் கூறினார்.
உடல் ரீதியான பாலியல் தொல்லைகளைப் போலவே இணையவழி தொல்லைகளும் கடுமையான உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில், இணையத்தில் பகிரப்படும் அவதூறான விஷயங்கள் மிக வேகமாகப் பரவக்கூடியவை என்பதோடு, அவை நிரந்தரமாக இணையத்தில் தங்கிவிடுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர் மன உளைச்சலையும், சமூக அவமதிப்பையும், தங்களின் பாதுகாப்பு குறித்த பயத்தையும் ஏற்படுத்துகின்றன.
எனவே, இதுபோன்ற குற்றவியல் சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாகக் காவல்துறையில் புகார் செய்யலாம் என்றும்; பணியிடங்களில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் அவர்கள் தங்களின் முதலாளிகளிடமோ, மனிதவளத் துறையிடமோ அல்லது பாலியல் தொல்லை எதிர்ப்பு தீர்ப்பாயத்திடமோ (Tribunal) முறையிடலாம் என்றும் கோகிலா வாணி வடிவேலு மேலும் விவரித்தார்.








