வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தால் 4.22 மில்லியன் ரிங்கிட் பெட்ரோல் மானியம் சேமிப்பு

26 மே 2026, 2:15 AM
வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தால் 4.22 மில்லியன் ரிங்கிட் பெட்ரோல் மானியம் சேமிப்பு

ஷா ஆலம், மே 26: அரசாங்க ஊழியர்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட வீட்டிலிருந்தே பணிபுரியும் (BDR) திட்டத்தின் மூலம், கடந்த மே 25-ஆம் தேதி வரையில் 4.22 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான (RON95) பெட்ரோல் மானியம் சேமிக்கப்பட்டுள்ளதாகக் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

இது 2.14 மில்லியன் லிட்டர் பெட்ரோல் நுகர்வுச் சேமிப்பிற்குச் சமம் என்றும், கடந்த ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்பட்ட இந்த முன்முயற்சியானது, உலகளாவிய விநியோக நெருக்கடியைத் தொடர்ந்து அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நிதிச் சுமையைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது என்றும் பெரித்தா ஹரியான் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

புத்ராஜெயாவில் நேற்றிரவு நடைபெற்ற 'ஏராட்' (ERAT) நற்பாராட்டு விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய தலைமைச் செயலாளர், இந்த வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் என்பது சும்மா ஓய்வெடுப்பதற்கான ஒன்று அல்ல என்பதை மீண்டும் நினைவுபடுத்தினார்.

பெட்ரோல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் இதற்கு ஒப்புதல் அளித்தது என்றும், மானிய அழுத்தம் கடுமையாக அதிகரித்த போதிலும், மக்களுக்கு வழங்கப்படும் பொதுச் சேவைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இந்தத் திட்டம் திறம்படச் செயல்படுவதை உறுதி செய்யவும், மக்கள் சேவையில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும், ஒவ்வொரு துறைத் தலைவர்களும் 'தேகாஸ்' (T.E.G.A.S) எனும் கொள்கையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று ஷம்சுல் அஸ்ரி வலியுறுத்தினார்.

அதாவது, விரைவான நடவடிக்கை, பரிவு, தெளிவான சிந்தனை, புதிய சூழலுக்கு ஏற்ப மாறுதல் மற்றும் பயனுள்ள உத்திகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இக்கொள்கையை, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் துறைத் தலைவர்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், சமூகத்தில் ஒருவரின் அந்தஸ்தைப் பார்க்காமல் நேர்மையான முறையில் சேவையாற்ற வேண்டும் என்று கூறிய அவர், அனைத்து அரசு ஊழியர்களும் 'மலேசியா' (M.A.L.A.Y.S.I.A) எனப்படும் உன்னதப் பண்புகளைத் தங்களின் பணியில் பிரதிபலிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

நட்பு, நீதி, மேன்மை, நெறிமுறை, நம்பிக்கை, விசுவாசம், சீர்திருத்தம் மற்றும் விவேகம் ஆகிய இந்த மதிப்புகளை நினைவூட்டிய அவர், பதவிகளைப் பார்த்துச் சேவையில் பாகுபாடு காட்டக் கூடாது என்றும், ஒரு டத்தோவிற்கு வழங்கப்படும் அதே புன்னகையுடனும் மரியாதையுடனும் ஒரு துப்புரவுத் தொழிலாளிக்கும் சேவை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இந்த நிகழ்வில் பேசிய அமலாக்க முகவர் நற்சான்றிதழ் ஆணையத்தின் (EAIC) தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் பக்கர், ஒரு துறைத் தலைவராகப் பணியாற்றுவது எளிதான காரியம் அல்ல என்றும், அவர்கள் மிகப்பெரிய பொறுப்பைச் சுமக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

எந்தவொரு தவறான செயல்களையும் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்ட துறையைத் தொய்வடையச் செய்வது மட்டுமன்றி, ஒட்டுமொத்த அமலாக்க முகமையின் மீதான நம்பகத்தன்மையையும் சீர்குலைத்துவிடும் என்று அவர் எச்சரித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.