தஞ்சோங் சிப்பாட்டில் பன்றிப் பண்ணைகளை முழுமையாக மூட உத்தரவு – மாநில அரசு

19 மே 2026, 6:23 AM
தஞ்சோங் சிப்பாட்டில் பன்றிப் பண்ணைகளை முழுமையாக மூட உத்தரவு – மாநில அரசு

ஷா ஆலாம், மே 19: கோலா லங்காட், தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள பன்றிப் பண்ணைகளை மூடுவதற்கு மாநில அரசால் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆறு மாதக் கால அவகாசம் முடிவுக்கு வருவதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அந்தப் பண்ணைகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா, பண்ணையாளர்கள் தங்களின் கால்நடைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் அல்லது அவற்றை விற்பனை செய்துவிட்டு தங்களின் வணிகச் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதற்கும் ஏதுவாகவே இந்த ஆறு மாதக் கால அவகாசம் தளர்வாக வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

தங்களுக்கு இன்னும் சில இறுதிப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது என பண்ணையாளர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், இந்தக் காலக்கெடு முடிந்தவுடன் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளதாக 'உத்துசான் மலேசியா' செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, சிலாங்கூர் சுல்தான், மாட்சிமை தங்கிய சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள், மாநிலத்தில் இயங்கி வரும் பன்றிப் பண்ணைகளை மூடுமாறு உத்தரவிட்டதுடன், புக்கிட் தகார் பகுதியில் புதிய பன்றிப் பண்ணைகளை அமைப்பதற்கும் தனது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதியன்று நடைபெற்ற 15-ஆவது சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றியபோதும், சுல்தான் அவர்கள் தனது உத்தரவை மீண்டும் ஒருமுறை உறுதியாக வலியுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 7-ஆம் தேதியன்று சுல்தான் அவர்களின் தனிச் செயலாளர் டத்தோ முகமட் முனிர் பானி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், சிலாங்கூர் மாநிலத்தில் இனி எவ்வித பன்றிப் பண்ணைகளும் இயங்கக் கூடாது என்பதை மாட்சிமை தங்கிய சுல்தான் அவர்கள் மீண்டும் திட்டவட்டமாக நிலைநிறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.