அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, பாரம்பரிய உணவுகளுக்கான ஒருங்கிணைந்த மையத்தை அமைக்கும் திட்டம்

8 மே 2026, 2:20 AM
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய, பாரம்பரிய உணவுகளுக்கான ஒருங்கிணைந்த மையத்தை அமைக்கும் திட்டம்

ஷா ஆலம், மே 8: சிலாங்கூர் மாநிலத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழும் பாரம்பரிய உணவுகள் மற்றும் கைவினைப் பொருட்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் வகையில், 'ஒரே இட மையம்' (One-Stop Centre) அமைக்கப்படவுள்ளதாக மாநில கலாச்சாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களுக்கு அலையாமல், ஒரே இடத்திலேயே சிலாங்கூரின் பாரம்பரிய சுவைகளை ருசிக்கவும், கலாச்சாரங்களை அறிந்துகொள்ளவும் முடியும்.

சிலாங்கூர் மாநிலம் தொழில்மயமாக்கல் மற்றும் வணிக ரீதியாக அதிவேகமாக வளர்ந்து வந்தாலும், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் 'காஸ்ட்ரோனமி' (Gastronomy) எனப்படும் உணவுக்கலைத் துறையை வலுப்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

"சிலாங்கூருக்கு என்று தனித்துவமான உணவு அடையாளங்கள் உள்ளன. எனவே, பண்டிகைகள் அல்லது விசேஷ காலங்களுக்காகக் காத்திருக்காமல், மக்கள் எப்போது வேண்டுமானாலும் நமது பாரம்பரிய உணவுகளை அனுபவிக்க இத்தகைய ஒரு மையம் அவசியமாகிறது.

இந்த மையத்தில் உணவுகள் மட்டுமின்றி, சிலாங்கூர் ஜோகெட் நடனம் மற்றும் 'செம்புலிங்' (Cempuling) இசை போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதோடு, ஒன்பது இதழ்களைக் கொண்ட 'தஞ்சோங்' மலர் (Bunga Tanjong) வடிவமைப்புடன் கூடிய பிரத்யேக பாதேக் உடைகளையும் இங்கு பெற முடியும்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இருப்பினும், அந்தந்த மாவட்டங்களில் பாரம்பரிய உணவுகளைத் தயாரிக்கும் சிறு தொழில்முனைவோர் தங்களின் வணிகத்தைத் தொடர்ந்து நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், அதன் மூலமே உள்ளூர் தயாரிப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், பாரம்பரிய உணவுத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறப்பு உதவி மானியத்தை (Grant) உருவாக்குவதற்கான ஆய்வறிக்கையைத் தமது தரப்பு தயாரித்து வருவதாகவும் டத்தோ போர்ஹான் தெரிவித்தார்.

"உதாரணத்திற்கு, செம்புலிங் இசைக் கலைஞர்களுக்கு உபகரணங்கள் வழங்கி உதவுவது போல, உணவுக்கலைத் துறையினருக்கும் ஊக்கத்தொகை வழங்கி உதவ வேண்டியது அவசியம்.

தற்போது முன்னணி தங்கும் விடுதிகளும் சத்தே (Sate) மற்றும் நாசி அம்பெங் (Nasi Ambeng) போன்ற நமது பாரம்பரிய உணவுகளைப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன," என அவர் மேலும் கூறினார்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.