கோலாலம்பூர், மே 13 - நாட்டின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை 150 லிட்டராகக் குறைக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவு, ஒரு படிப்படியான சீர்திருத்த நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, மானிய மறுசீரமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமையும் என மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தின் (UKM) பொருளாதார மற்றும் மேலாண்மை பீடத்தின் நுண்-பொருளாதாரப் பிரிவுத் தலைவர் பேராசிரியர் டாக்டர் முஸ்தசார் மன்சூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மீடியா சிலாங்கூருக்கு அவர் அளித்த பேட்டியில், தற்போதைய சூழலில் பொதுமக்கள் தேவையற்ற செலவுகளைக் குறைத்து சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அன்றாடத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் எரிபொருளைத் திட்டமிட்டுப் பயன்படுத்த மக்களை மறைமுகமாகப் பயிற்றுவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே பல மலேசியர்கள் சிக்கன நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும், பலர் மின்சார வாகனங்களுக்கு (EV) மாறுவது மற்றும் திட்டமிட்ட சுற்றுப்பயணங்களைத் தள்ளிவைப்பது போன்ற முடிவுகளை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்ட கால அடிப்படையில், இந்த நடவடிக்கை நாட்டின் புதைபடிவ எரிபொருள் (Fossil fuel) சார்ந்திருப்பத்தைக் குறைப்பதோடு, பசுமைத் தொழில்நுட்பச் சந்தையின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் என டாக்டர் முஸ்தசார் கூறினார்.
குறிப்பாக, அதிக வருமானம் ஈட்டும் பிரிவினரும் பெரிய நிறுவனங்களும் சூரிய ஆற்றல் (Solar) மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற சிக்கனமான மாற்று வழிகளுக்கு மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக அரசாங்கம் மின்சார வாகன மின்னூட்ட வசதிகள் மற்றும் வீட்டு உபயோகச் சூரிய ஆற்றல் கருவிகளுக்கான சலுகைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
முன்னதாக, உலகளாவிய எண்ணெய் சந்தையில் நிலவும் சீரற்ற நிலை மற்றும் மேற்கு ஆசிய மோதல்களின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் BUDI95 தகுதி வரம்பு 300 லிட்டரிலிருந்து 200 லிட்டராகக் குறைக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த மாதாந்திர ஒதுக்கீடு 150 லிட்டராகக் குறைக்கப்படலாம் என நிதித்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் நேற்று அறிவித்திருந்த நிலையில், பின்னர் அந்தத் தகவலை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








