உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு: RON95 மானியத்தை நிலைநிறுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

4 மே 2026, 3:50 AM
உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு: RON95 மானியத்தை நிலைநிறுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

புத்ராஜெயா, மே 4: உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது அரசாங்கத்தின் நிதிநிலைக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், பெரும்பான்மையான மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற மானிய விலையிலேயே நிலைநிறுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எண்ணெய் விநியோகம் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இன்று நடைபெற்ற இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றங்களால் சர்வதேச வர்த்தகப் பாதைகளில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி செலவுகளை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதுவே உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்விற்குப் பிரதான காரணியாக அமைந்துள்ளது என்று அவர் விளக்கினார்.

இருப்பினும், ஈரான் மற்றும் ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற பிற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் மலேசியா கொண்டுள்ள சுமூகமான உறவின் மூலம், உள்நாட்டுத் தேவைக்கான எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை அரசாங்கத்தால் தொடர்ந்து உறுதி செய்ய முடிகிறது என்று அவர் கூறினார்.

"எண்ணெய் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை, ஆனால் அதன் விலை உயர்ந்துள்ளது. இது நம்மால் உருவானது அல்ல, மாறாக வெளிநாட்டுக் காரணிகளால் ஏற்பட்ட சவாலாகும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் மேலும் கூறுகையில், அரசாங்கம் 'பூடி மடாணி' (BUDI95) திட்டத்தின் கீழ் இம்மாணியத்தைச் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். இதற்காக அரசாங்கம் தற்போது மாதந்தோறும் 5 பில்லியன் ரிங்கிட் மானியமாகச் செலவிட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இச்செலவு 700 மில்லியன் ரிங்கிட்டாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

"எண்ணெய் விலை மேலும் அதிகரித்தால், இந்த மானியச் சுமை மாதம் 6 பில்லியன் ரிங்கிட்டையும் தாண்டக்கூடும். இருப்பினும், மலேசியா ஓர் ஏழை நாடு அல்ல என்பதால், மக்களுக்காக இந்தச் சுமையை அரசாங்கம் தாங்கி நிற்கிறது," என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானுக்கு எதிராகக் கடற்படை முற்றுகை நீடிக்கக்கூடும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 120 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ள சூழலில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எண்ணெய் விலை உயர்வு என்பது உலகளாவிய எதார்த்த நிலை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், இது உள்நாட்டுக் கொள்கைகளின் பலவீனத்தால் ஏற்பட்டது அல்ல என்றும் பிரதமர் அன்வார் இப்ரஹிகிம் தனது உரையில் தெளிவுபடுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.