ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்ய வாய்ப்பில்லை - மலேசியா

8 மே 2026, 1:57 AM
ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்ய வாய்ப்பில்லை - மலேசியா

செபு, மே 8: மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடாகத் திகழ்ந்த போதிலும், நாட்டின் தேவைக்காக தினசரி சுமார் 400,000 பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய சூழலில் இருப்பதால், மற்ற ஆசியான் நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்யும் நிலையில் மலேசியா இல்லை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜோஹாரி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.

மலேசியா ஒரு எண்ணெய் உற்பத்தி நாடு என்ற நற்பெயரைப் பெற்றிருந்தாலும், தற்போதைய யதார்த்த சூழலில் மலேசியா ஒரு 'நிகர இறக்குமதியாளர்' (Net Importer) ஆகவே கருதப்படுகிறது.

இங்கு நடைபெற்ற 27-வது ஆசியான் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டம் மற்றும் ஆசியான் வெளியுறவு மற்றும் பொருளாதார அமைச்சர்களின் கூட்டுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், மலேசியச் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.

உலகளாவிய விநியோக நெருக்கடிக்கு மத்தியில், மற்ற ஆசியான் நாடுகள் ஏதேனும் மலேசியாவிடம் எண்ணெய் விற்பனை செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனவா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "நாமே தினசரி 400,000 பேரல்களை இறக்குமதி செய்து வரும் நிலையில், நம்மால் மற்றவர்களுக்கு எண்ணெய் விற்க முடியாது," என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், இயற்கை எரிவாயு (LNG) துறையில் மலேசியாவின் நிலை சாதகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதில் மலேசியா இன்னும் ஒரு 'நிகர ஏற்றுமதியாளராகவே' (Net Exporter) நீடிக்கிறது.

"இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் நமக்குக் கிடைக்கும் உபரி வருமானம், கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்கப் பெரிதும் உதவுகிறது," என்று அவர் விளக்கினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் மோதல்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், மலேசிய அரசாங்கம் தற்போது வரை RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட் என்ற நிலையான மட்டத்தில் வைத்திருக்க முடிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நெருக்கடியால் மற்ற நாடுகளைப் போலவே மலேசியாவும் பாதிக்கப்பட்டாலும், அதன் தாக்கத்தைச் சமாளிக்கும் நிலையில் அரசு உள்ளது.

எப்போது போர் முடியும் என்று யாராலும் கணிக்க முடியாவிட்டாலும், இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் அவர் தனது பேட்டியின் போது தெரிவித்தார்.


உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.