அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு

13 மே 2026, 3:11 AM
அரசு திட்டங்கள் அனைத்தும் இலக்கு குழுக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அமைச்சுகளுக்குப் பிரதமர் உத்தரவு

கோலாலம்பூர், மே 13 - உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் வேளையில், அரசின் அனைத்துத் திட்டங்களும் இலக்கு குழுக்களை, குறிப்பாகப் நலிவடைந்த மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து அமைச்சுகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் (MTEN) கூட்டத்திற்குப் பிறகு, நிதி அமைச்சருமான அவர் தனது முகநூல் பக்கத்தில் இத்தகவலைப் பகிர்ந்துள்ளார்.

உலகப் பொருளாதார அதிர்ச்சிகளால் மக்கள், குறிப்பாகச் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் தமது அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தும் என அவர் அதில் உறுதியளித்துள்ளார்.

மேலும், அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகளால் சிரமப்படும் வியாபாரிகளுக்கு உதவும் வகையில், வணிக வளாகங்களின் வாடகையைக் குறைக்க அனைத்து உள்ளூர் அதிகாரிகளும் முன்வர வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மற்றும் மாரா (MARA) ஆகிய அமைப்புகள் ஏற்கனவே வாடகைக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மற்ற மாநிலங்களிலும் உள்ள ஊராட்சி மன்றங்கள் இந்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க, உலகளாவிய விநியோக நெருக்கடி கண்காணிப்புத் தளம் (Dashboard) ஒன்றை அமைக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பொருளாதாரத்துறை அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகமட் நசீர் கூறுகையில், பொருளாதார அமைச்சு மற்றும் புள்ளிவிவரத் துறையால் உருவாக்கப்பட்ட இந்தக் கண்காணிப்புத் தளம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்தார்.

இதன் மூலம் விநியோகம் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பான கொள்கை மேம்பாடுகளை அரசாங்கம் இன்னும் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.