வணிக வளாகங்களின் வாடகையைக் குறைக்கப் பிரதமர் உத்தரவு

5 மே 2026, 10:15 AM
வணிக வளாகங்களின் வாடகையைக் குறைக்கப் பிரதமர் உத்தரவு

ஷா ஆலம், மே 5: உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள ஊராட்சி மன்றங்களின் கீழ் (PBT) இயங்கும் வணிக வளாகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் கீழ் உள்ள கடைகளின் வாடகையைக் குறைக்குமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக மாரா (MARA) மற்றும் உடா (UDA) போன்ற அரசு முகமைகளுக்குச் சொந்தமான வணிக வளாகங்களின் வாடகைக் குறைப்பு இந்த மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிறு வணிகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் எதிர்கொள்ளும் அன்றாடச் சிரமங்களை அரசு உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகளாவிய விநியோகத் தட்டுப்பாட்டினால் ஏற்படும் வாழ்க்கைச் செலவின உயர்வு, இறுதியில் பொதுமக்களையும் வணிகர்களையும் ஒருசேர அழுத்துவதாகவும், அதனைச் சமாளிக்க இத்தகைய வாடகைக் குறைப்பு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிறு வணிகர்களுக்குக் கை கொடுக்கும் இந்த முயற்சியை முதற்கட்டமாகச் சிலாங்கூர் மாநில அரசு வரவேற்றுள்ளதுடன், மாநிலத்தில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதி வணிக வளாக வாடகையைக் குறைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தப் புதிய நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு தொழில்முனைவோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த நேரடித் தலையீடு, பொருளாதார நெருக்கடியான காலக்கட்டத்தில் சிறு வணிகர்களின் சுமையைக் குறைப்பதுடன், சந்தையில் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மறைமுகமாக உதவும் எனப் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் சார்ந்த இத்தகைய திட்டங்களை மாநில அரசுகளும் உள்ளூர் அதிகாரிகளும் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.