ஷா ஆலம், ஜூன் 22- இலக்கவியல் துறை துடிப்புடன் செயல்படுவதை உறுதி செய்ய கடந்த மூன்று ஆண்டுகளாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மேற்கொண்ட முயற்சிகள் கோவிட்-19 நோய் தொற்று காலத்திலும் பொருளாதாரத் துறை சுறுசுறுப்புடன் செயல்படுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சிறு வணிகர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டுவதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்ட கிராப் சிலாங்கூர் , பிளாட்ஸ் சிலாங்கூர், மற்றும் இ-பாசார் ராயா சிலாங்கூர் போன்ற தளங்களை உதாரணம் கூறலாம் என்று வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
முன்பு இணைய வர்த்தகம் மற்றும் இலக்கவியல் துறைகளிலிருந்து விலகியிருந்த சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கூட இத்திட்டங்களின் அமலாக்கத்திற்கு பின்னர் அதிகளவில் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இந்த இலக்கவியல் துறையின் வாயிலாக ஈட்டப்படும் வருமானமும் அதிகரித்துள்ளது. கடந்த சீனப்புத்தாண்டு காலத்தில் 230 கோடி வெள்ளி அளவுக்கு வர்த்தகத்தை பதிவு செய்த து என்றார் அவர்.
வரும் சனிக்கிழமையுடன் நிறைவுடையும் அமருடின் ஷாரியின் மூன்றாண்டு கால நிர்வாகம் குறித்து கருத்துரைத்த போது அவர் இதனைக் கூறினார்.
இலக்கவியல் துறைக்கு அமிருடின் அளித்து வரும் முக்கியத்துவம் விவேக மாநிலம் என்ற அந்தஸ்தை சிலாங்கூருக்கு தந்துள்ளது என்று கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யி வேய் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் மந்திரி புசார் மிகத் தீவிரமாக செயல்பட்டார். இதன் காரணமாக சிறு வணிகர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடிந்ததோடு எங்களைப் போன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பணியை இலகுவாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டியது என்றார் அவர்.








