ஈப்போ, மே 17 – நாட்டில் உள்ள பெண்களை, குறிப்பாக பி40 (B40) குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்கள் சுயதொழில் மற்றும் தொழில்முனைவோர் துறையில் மேம்பாடு அடைவதை நோக்கமாகக் கொண்டு, அமானா இக்தியார் மலேசியா (AIM) அமைப்பின் கீழ் ‘படூரி மடாணி திட்டம்’ (Paduri Madani Scheme) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இத்திட்டத்தை நேற்று தொடக்கி வைத்தார்.
புதிதாக 29,000 பெண் தொழில்முனைவோர்களை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ள இத்திட்டம், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசியப் பெண்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் மாதாந்திர குடும்ப வருமானம் 5,880 ரிங்கிட்டிற்கு மிகாமலும் அல்லது தனிநபர் வருமானம் 1,470 ரிங்கிட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதும் இத்திட்டத்திற்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர், கடன் வாங்கிய தொகையைத் திரும்பச் செலுத்துவதில் மலேசியப் பெண்கள் காட்டும் அசாத்திய ஒழுக்கத்தையும், அமானா இக்தியார் மலேசியாவின் மிகச்சிறந்த கடன் மறுசெலுப்பீடு சாதனையையும் சுட்டிக்காட்டி தனது பெருமிதத்தைப் பகிர்ந்து கொண்டார்.
"சமீபத்தில் தான் நாம் மகளிர் தினத்தைக் கொண்டாடினோம். பெண்கள் என்பவர்கள் யார்? அவர்கள் நம்முடைய தாய்கள், மனைவிகள், மகள்கள் மற்றும் சகோதரிகள் ஆவர். இதனை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளும்போது, அவர்களுக்காக இதுவரை ஒரு மிகப்பெரிய பிரத்யேகத் திட்டம் கொண்டு வரப்படவில்லை என்பதை உணர முடிகிறது.
பெண்கள் தங்களின் கடன் வாங்கும் மற்றும் அதனைச் சரியாகத் திரும்பச் செலுத்தும் ஆற்றலை நிரூபிக்க இந்த அமானா இக்தியார் மலேசியா திட்டம் ஒரு பெரும் ஊக்கமாக அமைகிறது. பெண்கள் மன உறுதி மிக்கவர்கள், திறமையானவர்கள், அதோடு மிக வலுவான நற்பண்புகளையும் குணாதிசயங்களையும் கொண்டவர்கள்.
இந்த விழாவில் பேரா மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ சாரானி முகமட், அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், திறச்செரி (Treasury) பொதுச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூட் மெரிகான் மற்றும் அமானா இக்தியார் மலேசியாவின் அறங்காவலர் வாரியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சையட் ஹுசைன் சையத் ஜுனிட் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
குடும்பங்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டெடுப்பதே அமானா இக்தியார் மலேசியாவின் முதன்மை நோக்கம் என்பதால், இத்திட்டத்தின் கீழ் கறுப்புப் பட்டியலில் (blacklisted) உள்ளவர்கள் அல்லது திவாலானவர்களாக (bankrupt) அறிவிக்கப்பட்ட பெண்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், இக்கடன்களுக்கு எந்தவொரு ஜாமீன்தாரரோ (guarantor) அல்லது பிணையோ (collateral) தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பு அம்சமாகும்.
மலேசியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டம் மிகவும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மலாய், சீனர், இந்தியர், சபா மற்றும் சரவாக் மாநில பூமிபுத்ரா பெண்கள், அஸ்லி மக்கள் (Orang Asli), சயாமிய சமூகம் மற்றும் நகர்ப்புற, கிராமப்புறங்களில் வாழும் பி40 பிரிவு பெண்கள் என நாட்டின் ஏழு முக்கியப் பிரிவினரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், பொருளாதாரப் பிரிவின் கீழ் (i-Paduri Mesra, i-Paduri Srikandi மற்றும் i-Paduri Muda) 3,000 ரிங்கிட் முதல் 30,000 ரிங்கிட் வரையிலும், சமூகப் பிரிவின் கீழ் (i-Paduri Wibawa, i-Paduri Sejahtera, i-Paduri Bestari மற்றும் i-Paduri Penyayang) 15,000 ரிங்கிட் வரையிலும் நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டம் மலேசியப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








