கோலாலம்பூர், மே 16- கடந்தாண்டு தொடக்கத்தில் நாட்டில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்ட போது நாட்டில் குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும் என பரவலாக கணிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு ஆன போதிலும் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை.
மலேசிய புள்ளிவிபரத் துறையின் 2010 முதல் 2040 வரையிலான மக்கள் தொகை தொடர்பான கணிப்பில் வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் 60 வயதைக் கடந்த மலேசியர்கள் நாட்டின் மக்கள் தொகையில் 15 விழுக்காட்டைக் கடந்து விடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறப்பு விகிதம் குறைவது மற்றும் முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகிய இரண்டும் நாட்டிற்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.
பிறப்பு விகிதம் குறையும் பட்சத்தில் நாட்டில் மனித வள பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதாரத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். அதே சமயம் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சுகாதார செலவினங்களுக்காகவும் ஓய்வூதியம் வழங்குவதற்காகவும் அரசாங்கம் அதிக நிதியை செலவிட வேண்டி வரும்.
நாட்டில் பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை தரவுகள் காட்டுவதாக மலேசிய புள்ளி விபரத்துறையின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமது உஸீர் மஹாடின் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டதும் குழந்தை பிறப்பில் சரிவு ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று அவர் தெரிவித்தார்.
குழந்தை பேறு பெறுவதில் முன்பு சிக்கலை எதிர்நோக்கிய தம்பதியர் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் வெற்றிகரமாக குழந்தையை ஈன்றெடுத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தவிர, தாமதமாக திருமணம் செய்யும் காரணத்தால் குழந்தை பேறு கிடைப்பதில் பல தம்பதியர் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








