பெட்டாலிங் ஜெயா, மே 10- பல்வேறு நொண்டிச் சாக்குகளை கூறி மாநில அல்லது மாவட்ட எல்லைகளைக் கடப்பதற்கு வாகனமோட்டிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை போலீசார் அம்பலப்படுத்தியுள்ளனர்.
நோன்புப் பெருநாளுக்கு புத்தாடைகளை கொடுக்க சேர்க்க வேண்டும், நண்பர்களிடம் பலகாரங்களை கொடுக்க வேண்டும் என்பனப் போன்ற காரணங்களை வாகனமோட்டிகள் கூறுவதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
இத்தகைய தவறுகளை புரிவோருக்கு போலீசார் குற்றப்பதிவுகளை வழங்குவதில்லை. மாறாக, அவர்களை திருப்பி அனுப்பிவிடுகின்றனர் என்று அவர் சொன்னார்.
எனினும், தன்மூப்பாக நடந்து கொள்ளும் வாகனமோட்டிகளிடம் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உடனடியாக குற்றப்பதிவுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று முதல் நாங்கள் பல்வேறு இடங்களில் சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். நியாயமான காரணங்கள் இன்றி எல்லை கடக்க முயலும் பொறுப்பற்ற வாகனமோட்டிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். திரும்பிச் செல்லும்படி அவர்களுக்கு உத்தரவிடுகிறோம் என்றார் அவர்.
கூட்டரசு நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைத் தடுப்புச் சோதனையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சாலைத் தடுப்பு போடப்பட்ட இடங்களில் வேலை நாட்களின் போது வாகனப் போக்குவரத்து சீராக உள்ளதை உறுதி செய்ய கூடுதல் தடங்கள் ஏற்படுத்தப்படும் எனக் கூறிய அவர், எனினும், வாகனங்கள் மீதான சோதனை நிச்சயம் மேற்கொள்ளப்படும் என்றார்.








