கோல லங்காட், ஏப் 30- சிலாங்கூர் மாநிலத்தில் பெரிய அளவில் சோலார் எனப்படும் ஒளியீர்ப்பு தகடு திட்டங்களை மேற்கொள்வதற்கு விவசாய நிலங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
தொழிலியல் நிலங்களில் மட்டுமே சோலார் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என முன்பு வரையறுக்கப்பட்டிருந்ததாக சுற்றுலா, சுற்றுச்சூழல், பசுமை தொழில்நுட்பம் மற்றும் பூர்வ குடிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
சோலார் திட்டங்களை மேற்கொள்ள நில அந்தஸ்து பெரும் பிரச்னையாக இருந்து வந்தது. அந்த நடைமுறையை தற்போது நாங்கள் எளிதாக்கி விட்டோம். தொழில்துறை நிலங்களில் மட்டும் அத்தகைய திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி விவசாய நிலங்களுக்கும் தற்போது அனுமதி வழங்குகிறோம் என்றார் அவர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சிலாங்கூர் மாநில சோலார் தோட்டங்கள் தொடர்பான வழிகாட்டியை இத்திட்டத்தில் ஈடுபட விரும்புவோர் ஆராய்ந்த பார்க்கலாம் என்றும் அவர் சொன்னார்.
கோல லங்காட்டில் உள்ள சோலார் திட்டத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சிலாங்கூரில் கடந்த 2018ஆம் ஆண்டில் 98.34 ஹெக்டர் நிலப்பரப்பிலான சோலார் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள வேளையில் கோல லங்காட்டில் கடந்தாண்டு 21.45 ஹெக்டரில கடலில் மிதக்கும் சோலார் திட்டம் அமல் படுத்தப்பட்டது என்றார் அவர்.








