கோலாலம்பூர், மார்ச் 12- சட்டவிரோதமாக நீர் இணைப்பை ஏற்படுத்தியது தொடர்பில் தலைநகர், ஜாலான் கொக்ரேனில் உள்ள தொழிலாளர் தங்கும் விடுதி மீது ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணைய அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடமிருந்து கிடைத்த புகாரின் பேரில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்பான் அறிக்கை ஒன்றில் கூறியது.
இச்சம்பவம் தொடர்பில் 2006ஆம் ஆண்டு நீர் தொழில்துறை சட்டத்தின் (சட்டம் 655) 123(1)வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
சோதனைக்குட்படுத்தப்பட்ட அந்த தங்கும் விடுதியில் போக்குவரத்து சம்பந்தப்பட்ட கட்டுமானப் பகுதியில் வேலை செய்யும் சுமார் 800 தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்.
அந்த தங்கும் விடுதி அங்கீகரிக்கப்படாத ஒரு மீட்டர் வாயிலாக நீரை பெற்றுள்ளதை ஸ்பான் அதிகாரிகள் விசாரணையில் கண்டறிந்தனர். அந்த மீட்டர் அந்த தங்கும் விடுதிக்கு உரியது என்பதற்கான சான்று எதுவும் ஆயர் சிலாங்கூர் நிறுவனத்திடம் இல்லை.
அங்கு மேற்கொள்ளப்பட்ட குளோரின் சோதனையில் அந்த நீர் சுத்திகரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.








