ECONOMY

பொது முடக்கம்-  இருள் மயமானது சிகை அலங்கரிப்பாளர்களின் எதிர்காலம்

23 ஜனவரி 2021, 1:29 PM
பொது முடக்கம்-  இருள் மயமானது சிகை அலங்கரிப்பாளர்களின் எதிர்காலம்

கோலாலம்பூர், ஜன 23- கடந்தாண்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீக்கப்பட்டு வர்த்தகத்தை தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்ட போது ஆக க்கடைசியாக தொழிலைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்ட துறைகளில் முடி திருத்தும் நிலையங்கள் மற்றும் முக ஒப்பனை நிலையங்களும் அடங்கும்.

சுகாதார அமைச்சு நிர்ணயித்த கூடல் இடைவெளியைக் கடைபிடிப்பது இவ்விரு துறைகளைப் பொறுத்தவரை சிரமமானது என்பதாலும் நெருக்கமான தொடர்பை உட்படுத்திய இத்துறைகள் மூலம் நோய்த் தொற்று பரவலாம் என்ற அச்சத்தின் பேரிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1,350 கோடி வெள்ளி பங்களிப்பைச் செய்யும் சிகை அலங்கரிப்பு மற்றும் முக ஒப்பனைத் துறைகள் கடந்த ஜூன் மாதம் வர்த்தகத்தை தொடர அனுமதிக்கப்பட்டப் பின்னர் எந்தவொரு புதிய தொற்று மையத்தையும் உருவாக்கவில்லை.

எனினும், கடந்தாண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட முதலாம் கட்ட பொது முடக்கத்தின் போது அனைத்து சிகையலங்கரிப்பு நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக வீடு வீடாகச் சென்று முடி திருத்தும் பணியை மேற்கொண்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டுமே இந்நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

நிலைமை ஓரளவு சீரடைந்து வர்த்தகம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிய நிலையில் எம்.சி.ஒ. 2.0 என்ற பெயரில் பொது முடக்கம் மீண்டும் அமல்படுத்தப்பட்டு 16,728 பதிவு பெற்ற சிகையலங்கரிப்பாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்த 74,500 தொழிலாளர்களின் எதிர்காலத்தை மறுபடியும் கேள்விக்குறியாக்கியது.

கடந்தாண்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோது  5,800 சிகையலங்கரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதாக மலேசிய சிகையலங்கரிப்பாளர் சம்மேளனத்தின் பிரதிநிதி பம்பாங் சுட்ரிஸ்னோ கூறினார்.

மேலும் அதிகமானோ தங்கள் வர்த்தகத்தை மூடும் அபாயம் உள்ள நிலையில் சிகையலங்கரிப்பு நிலையங்கள் மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கும்படி அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சை தாங்கள் வலியுறுத்தியுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த முறை அரசு நிர்ணயித்த விதிமுறைகளை நாங்கள் முறையாக பின்பற்றியதும் எங்கள் துறை சார்ந்த எந்த தொற்று மையமும் உருவாகவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. அதே போல் இம்முறையும் விதிமுறைகளை முறையாக அமல்படுத்த  முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.