ஷா ஆலம், டிச 26- சபாக் பெர்ணம் கடல் பகுதியில் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக சிலாங்கூர் மாநில அரசு மாநில மீன் வளத்துறைக்கு மூன்று லட்சம் வெள்ளி மானியத்தை வழங்கியுள்ளது.
கடல் பகுதியில் மீன்களுக்கான உறைவிடத்தை ஏற்படுத்தித் தருவதற்கு ஏதுவாக 14 செயற்கை கூண்டுகளை அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.
சபாக் பெர்ணம் கடலோரப் பகுதியில் மீன்களின் பெருக்கத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த செயற்கை கூண்டுகள் அமைக்கப்படுவதாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
இந்த நடவடிக்கையின் வாயிலாக அப்பகுதியில் மீன்கள் உள்பட கடல்வாழ் உயிரினங்கள் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சொன்னார்.
இதன் மூலம் இப்பகுதியில் மீன்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என நம்புகிறோம். முந்தைய ஆண்டில் 76,000 மெட்ரிக் டன்னாக இருந்த சபாக் பெர்ணம் வட்டாரத்தின் மீன் விற்பனை கடந்தாண்டில் 64,000 மெட்ரிக் டன்னாக குறைந்து விட்டது என்றார் அவர்.
சபாக் பெர்ணம் கடல் பகுதியில் செயற்கை கூண்டுகளை கடலில் இறக்கும் பணியை பார்வைட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2006ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்போது இரண்டாவது முறையாக இந்த செயற்கை கூண்டுகள் கடலில் இறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.








