சுற்றுச்சூழல் தரவு மேலாண்மையை வலுப்படுத்தல், பொது சுகாதார சேவை விரிவுபடுத்துவத RS 2 ல் கவனம் செலுத்தப்படும்

6 ஜூன் 2026, 9:13 AM
சுற்றுச்சூழல் தரவு மேலாண்மையை வலுப்படுத்தல், பொது சுகாதார சேவை விரிவுபடுத்துவத  RS 2 ல்  கவனம் செலுத்தப்படும்

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 6: மாநில அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மிகவும் திறமையாகவும் முழுமையாகவும் செயல் படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, சுற்றுச்சூழல் தரவு மேலாண்மை அமைப்புகளை மேம்படுத்துவது மற்றும் பொது சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவது ஆகியவை இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-2) முக்கிய நோக்கங்களாக அமைந்துள்ளன.

மிகவும் யதார்த்தமான மற்றும் நடைமுறைக்கு உகந்த முக்கிய செயல்திறன் குறி காட்டிகளை (KPI) நிர்ணயிப்பதில், முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) அனுபவங்களை இந்த RS-2 திட்டம் கருத்தில் கொண்டுள்ளது என்று பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் (EXCO) ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

"மறுசுழற்சி செய்யப்படும் சில பொருட்கள் மற்றும் உபகரணங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருப்பது அடையாளம் காணப்பட்ட சவால்களில் ஒன்றாகும். இதனால், வெற்றிகரமாக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களின் உண்மையான அளவை முழுமையாக அறிந்து கொள்வது கடினமாகிறது.

"ஆகவே, களத்தில் உள்ள உண்மையான நிலையை பிரதிபலிக்கும் வகையில், துல்லியமான மற்றும் முழுமையான தகவல்களின் அடிப்படையில் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை வகுக்க தரவு சேகரிப்பு அமைப்பை நாங்கள் வலுப்படுத்த விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.

இங்கு நடைபெற்ற பெலியா ஒன் சுங்கை (Belia On Sungai - BOS) நிகழ்வில் சந்தித்தபோது, ஐந்து ஆண்டுகளுக்கான குறிப்பிட்ட மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்ட ஒரே மாநிலம் சிலாங்கூர் மட்டுமே என்றும், இது மேம்பாட்டுத் திசையை மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் விரிவான முறையில் திட்டமிட அனுமதிக்கிறது என்றும் ஜமாலியா தெரிவித்தார்.

பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசாங்க கிளினிக்குகளில் நெரிசலைக் குறைப்பதற்காக, சுகாதார சேவைகளுக்கான மக்களின் அணுகலை விரிவுபடுத்துவதில் RS-2 கவனம் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

"அதே வேளையில், மனநலப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். ஏனெனில், இது உடல்நலம் மற்றும் தனி நபரின் நல் வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. இன்றைய சமுதாயத்தில் இந்த அம்சம் பெருகிவரும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது, மேலும் இதனை முழுமையாகக் கையாள வேண்டும்.

"மனநலப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்கள் நல்வாழ்வு குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பதோடு, தேவைப்படும்போது ஆரம்ப நிலையிலேயே உதவியும் சிகிச்சையும் பெற தயங்காமல் முன்வருவார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

முதியோர் சமுதாயத்தை (ageing society) எதிர்கொள்ள சிலாங்கூர் தயாராகி வரும் நிலையில், முதியவர்களை மையமாகக் கொண்ட சுகாதார பரிசோதனை திட்டங்களை மாநில அரசு விரிவுபடுத்த உத்தேசித்து உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஜமாலியாவின் கூற்றுப்படி, வயதானவர்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிப்பதையும், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடருவதையும் உறுதி செய்ய தடுப்பு மற்றும் ஆரம்பகால கண்டறிதல் அணுகுமுறைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

முன்னதாக, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள், எரிசக்தி நெருக்கடி மற்றும் உலகப் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உள்ளிட்ட தற்போதைய சவால்களைக் கருத்தில் கொண்டு RS-2 திட்டம் இந்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருந்தார்.

பிரபல பொருளாதார நிபுணர் மரியானா மஸுகாட்டோவின் முக்கிய அணுகுமுறையான 'பணி சார்ந்த மேம்பாட்டு மாதிரி' (mission-oriented development model), RS-2 திட்டத்தில் முன்னிலைப் படுத்தப்படும் அணுகுமுறைகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.