ஜூலை முதல் டி.வி.இ.டி (TVET) மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது அரசு ஆராய்ச்சி மையங்களுக்கு கட்டாயம்

6 ஜூன் 2026, 6:40 AM
ஜூலை முதல் டி.வி.இ.டி (TVET) மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது அரசு ஆராய்ச்சி மையங்களுக்கு கட்டாயம்

புத்ராஜெயா, ஜூன் 6: வருகின்ற ஜூலை மாதம் முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (டி.வி.இ.டி - TVET) மாணவர்களுக்குப் புதிய துறைகளில் பயிற்சி திட்டங்களை வழங்குவது அனைத்து அரசாங்கப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Hari TVET Negara.jpg

நாட்டின் அத்துறை சார்ந்த மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இந்த முயற்சியை ஒருங்கிணைக்க அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பக்கருக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கல்வி நிலையத்திலிருந்தும் குறைந்த பட்சம் 50 முதல் 100 டி.வி.இ.டி மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிரிப்டோ போன்ற புதிய மற்றும் உயர் தொழில் நுட்பத் துறைகளில் ஆரம்பப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

"செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ மற்றும் ஆற்றல் மாற்றம் (energy transition) போன்ற முற்றிலும் புதிய துறைகளில் நிபுணத்துவம் பெற அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்," என்று இன்று இங்கு 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய டி.வி.இ.டி தினக் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.இந்நிகழ்வில் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி, அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சம்சுல் அஸ்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட டி.வி.இ.டி மாணவர்கள் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (MARDI) அல்லது தேசிய அறிவியல் மன்றத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி பயிற்சி மையங்கள் போன்ற பல்வேறு ஏஜென்சிகளில் புதிய துறைகளில் பயிற்சி பெறுவார்கள் என்று அன்வார் தெரிவித்தார்.

“இதன் பொருள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில டி.வி.இ.டி பட்டதாரிகளின் சந்தை மதிப்பு, இளங்கலைப் பட்டம் பெற்றவர்களை விடத் தானாகவே உயரும். எனவே, இளங்கலைப் பட்டதாரிகள் பெறும் ஊதியத்தை விட இவர்களுக்குக் கூடுதல் சம்பளம் மற்றும் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

டி.வி.இ.டி பட்டதாரிகளின் தகுதியை உயர்த்துவது, இத்துறையில் ஈடுபட அதிகமான இளைஞர்களை ஈர்க்கவும் அரசாங்கம் முன்னெடுக்கும் கூடுதல் நடவடிக்கையாக இந்த முயற்சி அமையும் என்று பிரதமர் கூறினார்.

இன்றைய பொதுக் கல்வி அமைப்பில் இன்னும் பெறப்படாத திறன்கள் மற்றும் நிபுணத்துவத்தை மாணவர்கள் பெறுவதற்கு, கூடுதல் படிப்புகளுக்கு ஒவ்வொரு டி.வி.இ.டி-யிலும் எத்தனை மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்பதை நிர்ணயிக்க, சம்சுல் அஸ்ரி அடுத்த வாரம் அனைத்து ஆராய்ச்சி அமைப்புகளையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மலேசியாவில் டி.வி.இ.டி-யின் அபரிமிதமான வளர்ச்சிக்கு சிறந்த அரசாங்கக் கொள்கைகளும், தேசிய டி.வி.இ.டி மன்றத்தின் தலைவரான அஹ்மட் சாஹிட்டின் அர்ப்பணிப்புமே காரணம் என்று அன்வார் சுட்டிக்காட்டினார். ஆசியான் (ASEAN) பிராந்தியத்தில் நாட்டின் டி.வி.இ.டி தற்போது ஒரு முக்கிய அளவுகோலாக (benchmark) மாறியுள்ளது மிகவும் பெருமைக்குரியது என்றும், இக்கல்வியை பரவலாக உயர்த்துவதில் மலேசியாவின் திறனை இது நிரூபிக்கிறது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் கூறினார்.

“நாம் நமது டி.வி.இ.டி-யின் செயல் திறனை மேம்படுத்தியுள்ளோம். டி.வி.இ.டி பயிற்சியை ஒரு நாடு எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பதற்கான முக்கியமான அளவு கோல்களில் மலேசியாவின் டி.வி.இ.டி ஆசியான் வட்டாரத்தில் திகழ்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்; தற்போது இது ஆசியானில் முதன்மையான ஒன்றாகக் கருதப்படுகிறது.""அமைச்சரவையிலும் பொதுவான அரசாங்கத்திலும் உள்ள எனது சகாக்களிடம் நான் வலியுறுத்துவது போல், தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே இது போன்ற வெற்றி சாத்தியம் என்பதை இது உணர்த்துகிறது,” என்று அன்வார் மேலும் கூறினார்.

மனித மூலதன மேம்பாட்டை உந்தித் தள்ளும் இத்திறன் கல்வியின் பங்கை அங்கீகரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2-ஆம் தேதி தேசிய டி.வி.இ.டி தினம் கொண்டாடப் படுகிறது. அதோடு, பட்டதாரிகளின் திறன், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய கூறுகளை வலியுறுத்தும் 'டி.வி.இ.டி மடாணி(TVET MADANI) அஜெண்டாவை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தளமாகவும் இது விளங்குகிறது.

மலேசியா மடாணி கட்டமைப்பின் கீழ், டி.வி.இ.டி இனி இரண்டாம் பட்ச தேர்வாக இல்லாமல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அஜெண்டாவாக உயர்த்தப்பட்டுள்ளது. உலகளாவிய தொழில்துறை முதலீடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர் தொழில் நுட்பப் படிப்புகளை வழங்குவதன் மூலம் இத்துறையை வலுப்படுத்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.