மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தக வவுச்சர் வழங்கப்படும் - பிரதமர் அன்வார் அறிவிப்பு

29 மே 2026, 7:08 AM
மாணவர்களுக்கு 100 ரிங்கிட் புத்தக வவுச்சர் வழங்கப்படும் - பிரதமர் அன்வார் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 29: கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் இடைநிலைப்பள்ளிகள் (Sekolah Menengah) மற்றும் பொது உயர்கல்வி நிறுவனங்களின் (IPTA) மாணவர்களுக்கு 100 ரிங்கிட் மதிப்புள்ள புத்தக வவுச்சர்கள் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான புத்தக வவுச்சர் திட்டம் இவ்வாண்டும் தொடர்வதாகவும், கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் (WTCKL) இன்று தொடங்கி ஜூன் 7-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் (PBAKL) இந்த வவுச்சர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அந்தப் புத்தகக் கண்காட்சியின் அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர், கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த 100 ரிங்கிட் உதவித்தொகை, தற்போது நேரடியாகவே விநியோகிக்கப்படுவதாகக் கூறினார்.

இதன் மூலம், மாணவர்கள் புத்தகங்களை வாங்கும்போது அந்த தள்ளுபடியை உடனடியாகப் பெற முடியும் என்று விளக்கிய அவர், தங்களின் பிள்ளைகள் இந்த வவுச்சர்களை வீணடிக்காமல் பயனுள்ள வாசிப்புப் பொருட்களை வாங்குவதற்கு முழுமையாகப் பயன்படுத்துவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் நினைவூட்டினார்.

நவீன உலகில் இளைய தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கும், அவர்களுக்குப் புதிய அறிவை ஊட்டுவதற்கும் இத்தகைய சர்வதேச புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுவது மிகவும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

தற்கால சமூகத்தினர் சிக்கலான பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடுவதற்கு சமூக ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்கும் போக்கு அதிகரித்துள்ளதால், வாசிப்பின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அவர் கவலை தெரிவித்தார்.

எனவே, சமயக் கல்வி, அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்வதோடு, டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதிலும் கல்வியாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் நிதித் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காகப் பல்வேறு துறைகளில் அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தபோதிலும், கல்வி மற்றும் அறிவு சார்ந்த கலாச்சாரத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார்.

நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை வலுப்படுத்துவதற்காக, தேவையற்ற செலவுகளைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுகளும் முகமைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய சூழலில் அனைவரும் விவேகத்துடனும் பகுத்தறிவுடனும் செயல்பட்டு, பலவீனங்களைக் களைந்து, முன்னுரிமை அளிக்க வேண்டிய கடமைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.