கோலாலம்பூர், ஜூன் 5: மலேசியாவின் உணவுப் பாதுகாப்பை (Food Security) எவ்விதப் பாதிப்பும் இன்றி உறுதிசெய்வதற்கு, சுற்றுச்சூழல் நீடித்த நிலைத்தன்மை விவகாரத்தில் மிகவும் தீவிரமான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.
இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டுத் தனது முகநூல் பக்கத்தில், தற்போதைய பருவநிலை மாற்றத்தினால் (Climate Change) ஏற்பட்டு வரும் சவால்களை எதிர்கொள்வதில் பொதுமக்கள் அனைவரும் தங்களின் பங்கினை ஆற்ற வேண்டியது மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பருவநிலை மாற்றம் என்பது இனி எதிர்காலம் சார்ந்த ஒரு பிரச்சனை அல்ல, மாறாக அது நாம் இன்று நேரடியாக எதிர்கொண்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மலேயர்களாகிய நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் கழிவுகளைக் குறைத்தல், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல், மரங்களை நடுதல் மற்றும் இயற்கை வளங்களை விவேகமான முறையில் பயன்படுத்துதல் போன்ற சிறிய அளவிலான நற்செயல்களின் மூலம், ஒட்டுமொத்த சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் விளக்கமளித்தார்.
"இயற்கையின் உத்வேகத்துடன்... பருவநிலைக்காக... நமது எதிர்காலத்திற்காக..." (Inspired by Nature. For Climate. For Our Future) எனும் கருப்பொருளின் கீழ் இன்று அனுசரிக்கப்படும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமி தொடர்ந்து பசுமையாகவும், நீடித்த நிலையானதாகவும், வளமாகவும் திகழ்வதை உறுதிசெய்ய மக்கள் தங்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்திச் செயலாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
"ஒரே உலகம், ஒரே செயல், ஒரே நம்பிக்கை" என்ற உன்னத தாரக மந்திரத்தை முன்மொழிந்துள்ள அமைச்சர், சுற்றுப்புறத்தைப் பேணிக்காப்பதன் மூலமே நாட்டின் உணவு உற்பத்தியையும், நல்வாழ்வையும் நாம் தொடர்ந்து தடையின்றிப் பாதுகாக்க முடியும் என வலியுறுத்தியுள்ளார்.








