சுக்மா 2026: டீசல் விலை உயர்விலும் உணவு விநியோகம் போதுமானதாக இருக்கும் என சிலாங்கூர் அரசு உறுதி

19 மே 2026, 3:23 AM
சுக்மா 2026: டீசல் விலை உயர்விலும் உணவு விநியோகம் போதுமானதாக இருக்கும் என சிலாங்கூர் அரசு உறுதி

போர்ட் கிள்ளான், மே 19: எதிர்வரவிருக்கும் சுக்மா (SUKMA 2026) விளையாட்டு போட்டிகளின் போது உணவு விநியோகம் தடையின்றி போதிய அளவில் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டீசல் விலை உயர்வு காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தற்போதைய சூழலில் உணவுப் பற்றாக்குறை என்பது ஒரு பிரச்சனையாக இருக்காது. மாறாக விலை உயர்வினால் ஏற்படும் தாக்கமே தங்களின் முக்கிய கவலையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வெஸ்ட்போர்ட்ஸில் உள்ள 'ஷெல் மலேசியா' முனைய விரிவாக்கத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுக்மா போட்டிகளுக்கான உணவு விநியோகம் போதுமானதாக இருப்பதை தங்களின் சிறப்புக் குழு உன்னிப்பாகக் கவனித்து உறுதி செய்யும் என்று கூறினார்.

இந்த விலை உயர்வு அழுத்தத்தைக் குறைப்பதற்காக, சில குறிப்பிட்ட வகை வாகனங்களுக்கு டீசல் மானியங்களை வழங்குவது உள்ளிட்ட தகுந்த நடவடிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

அரசின் இத்தகைய உத்திப்பூர்வ கொள்கைகள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அதே வேளையில், மேற்கு ஆசியாவில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியிலும், விலையேற்றத்தின் தாக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் திறன் இன்னமும் அரசாங்கத்திற்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், மாதத்திற்கு 5 முதல் 6 பில்லியன் ரிங்கிட் வரையிலான தொகையை அரசாங்கம் எவ்வளவு காலத்திற்குத்தான் மானியமாகச் செலவிட முடியும் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார். இந்த நிதியை மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு நேரடியாகச் சென்றடையும் வகையில் பயன்படுத்துவதே முறையான நிதித் திட்டமிடலாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றி சுக்மா 2026 போட்டிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கு சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கடந்த ஏப்ரல் 26 அன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தவ்ஃபிக் ஜோஹாரி அறிவித்திருந்தார்.

தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் ஷா ஆலம் ஸ்டேடியம் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத நிலை போன்ற காரணங்களால் இப்போட்டிகளை ஒத்திவைக்குமாறு முன்னதாக சுல்தான் அவர்கள் பரிந்துரைத்திருந்த வேளையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் விளக்கத்தைக் கேட்டறிந்த பின்னர் இந்த ஒப்புதலை அவர் வழங்கியுள்ளார்.

அதன்படி, 22-ஆவது சுக்மா விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 24 வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா சுக்மா போட்டிகள் செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரையிலும் சிலாங்கூரில் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.