பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய பெண்ணுக்கு அபராதம்

19 மே 2026, 1:58 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய பெண்ணுக்கு அபராதம்

புத்ராஜெயா, மே 19: சமூக ஊடகங்கள் வழியாகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதை ஒப்புக்கொண்ட பெண் ஒருவருக்கு, சிப்பாங் நீதிமன்றம் 4,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நூர் இர்சலினா உமர் குமார் என்ற அந்தப் பெண், கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று தனது 'its.ellsaleena_' என்ற திரெட்ஸ் (Threads) சமூக ஊடகப் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதிகாரப்பூர்வ 'புலிட்டின் டிவி3' (Buletin TV3) செய்திப் பக்கத்தை மாற்றி அமைத்து (Edit), எரிபொருள் விலை உயர்வு குறித்து அவர் வெளியிட்டிருந்த அந்தப் போலிப் பதிவு, பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், வாழ்க்கைச் செலவினம் குறித்த தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்தியதாக மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் விதித்த இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட இர்சலினா உடனடியாக அபராதத் தொகையைச் செலுத்திவிட்டார்.

இந்த வழக்கு 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233(1)(a)-இன் கீழ் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் இது போன்ற வதந்திகளைப் பரப்புவது, சமுதாயத்தின் ஸ்திரத்தன்மையையும் அமைதியையும் சீர்குலைக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எம்.சி.எம்.சி எச்சரித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் எந்தவொரு தகவலையும் சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு முன்னதாக, அதன் உண்மைத்தன்மையை எப்போதும் சரிபார்க்க வேண்டும் என்றும், இணையத் தளங்களைப் பொறுப்புணர்வோடு பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.