புத்ராஜெயா, ஜூன் 3: மலேசியாவில் அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரச் சேவைகளும், 1998-ஆம் ஆண்டு தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் (சட்டம் 586) கீழ் பதிவு செய்யப்பட்ட அல்லது உரிமம் பெற்ற வளாகங்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சட்டபூர்வமாகப் பதிவு செய்யப்படாத அல்லது உரிய உரிமம் இல்லாத இடங்களில் இத்தகைய சுகாதாரச் சேவைகளை வழங்குவது அச்சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படும். இதற்குத் தண்டனையாக 5 லட்சம் ரிங்கிட் வரை அபராதம், 6 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
அங்கீகரிக்கப்படாத வளாகங்களில், குறிப்பாக அழகு கலை சார்ந்த மருத்துவச் சேவைகள் (Aesthetic Medical Services) உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரச் சேவைகள் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுவதாக அண்மைக்காலமாகப் புகார்களும் விசாரணைகளும் அதிகரித்து வந்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில சுகாதாரத் துறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட இதர நிறுவனங்களுடன் இணைந்து, ரகசியத் தகவல் அடிப்படையிலான சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அமலாக்கப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான காலக்கட்டத்தில் மட்டும், உரிமம் இல்லாத வளாகங்களில் நடத்தப்பட்ட சுகாதாரச் சேவைகள் குறித்து 1,020-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், இந்த புகார்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய புகார்களின் அதிகரிப்பானது, சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கும் தனிநபர்களின் தகுதிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள பெரும் கவலையையும் விழிப்புணர்வையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், இதுவரை உரிமம் இல்லாத 320 வளாகங்களில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 126 வழக்குகள் குறித்து முறையான புலனாய்வுக் கோப்புகள் திறக்கப்பட்டு விசாரணைகள் நடந்து வருவதோடு, 194 வழக்குகளுக்கு எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதே வேளையில், 70 வழக்குகள் நீதிமன்றத் தண்டனைக்காகக் கொண்டு செல்லப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு விவரித்துள்ளது.
நோயாளி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு, அதே வேளையில் வழங்கப்படும் மருத்துவச் சேவைகளின் தரம் ஆகியவற்றிற்கு அரசாங்கம் எப்போதும் முதலிடம் வழங்கும் என்றும், அதனை அனைத்துத் தரப்பினரும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
எனவே, இது போன்ற சட்டவிரோத மருத்துவச் செயல்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களின் புகார்களைச் சுகாதார அமைச்சின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (ckaps@moh.gov.my) வாயிலாகச் சமர்ப்பித்து, உரிய ஆதாரபூர்வ நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








