சட்டம் 852 அமலாக்கம்: நாடு முழுவதும் 683,000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் சுகாதார அமைச்சு சோதனை

2 ஜூன் 2026, 6:24 AM
சட்டம் 852 அமலாக்கம்: நாடு முழுவதும் 683,000-க்கும் மேற்பட்ட வளாகங்களில் சுகாதார அமைச்சு சோதனை

புத்ராஜெயா, ஜூன் 2: பொதுச் சுகாதாரத்திற்கான புகைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852) விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து, ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 683,704 வளாகங்களில் சோதனை நடத்தப்பட்டு, 34,903 அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த அமலாக்க நடவடிக்கைகளின் மூலம், அபராதம் விதிக்க கூடிய குற்றங்களுக்கு 233,831 அபராதங்கள் (காம்பவுண்ட்) விதிக்கப்பட்டுள்ளன என்றும், அபராதம் விதிக்க முடியாத குற்றங்களுக்காக 4,226 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றும் சுகாதார அமைச்சு (KKM) இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

"மேலும், 398 வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னும் வழக்குத் தொடரும் நடவடிக்கையில் உள்ளன. அதேவேளையில் 204 வழக்குகளுக்கு மொத்தம் ரிம 1,189,100 அபராதம் விதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது."

“சட்டம் 852-ஐ மீறும் எந்தவொரு செயலுடனும் சுகாதார அமைச்சு சமரசம் செய்து கொள்ளாது. இணையவழி புகையிலைப் பொருட்களின் விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பு குற்றங்கள், குறிப்பாக வேப் (vape) விற்பனை உட்பட அனைத்தையும் அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஏப்ரல் 30 வரை, இந்தச் சட்டத்தின் பிரிவு 7, 8, 9 மற்றும் 10 ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்கள் தொடர்பாக 2,595 விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டம் 852 ஆனது 2024 அக்டோபர் 1-ஆம் தேதி அமல்படுத்தப் பட்டதுடன், அதற்கான முழுமையான செயலாக்கம் ஓராண்டுக்குப் பின்னர் தொடங்கும்.

அதிகரித்து வரும் மின்னியல் சிகரெட்டுகள் (electronic cigarettes) உள்ளிட்ட புகைப் பொருட்களின் ஆபத்துகளிலிருந்து இளைய சமுதாயத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், அனைத்து வகையான புகைப் பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் முக்கிய கவனம் செலுத்தி, 'ஓப்ஸ் செலாமாட் பாப்பா' (Ops Selamat PaPa - பாதுகாப்பான நுரையீரல் நடவடிக்கை) திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் சட்டம் 852-ஐ அமல்படுத்துவதில் சுகாதார அமைச்சு உறுதியாக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

சட்டத்தை மீறுவதாக சந்தேகிக்கப்படும் இணையவழி வேப் பொருட்களின் விளம்பரம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பான புகார்கள் குறித்து, அமைச்சுக்கு புகார் வந்த 10 இணையத்தள தளங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் (MCMC) தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 (சட்டம் 588)-இன் பிரிவு 263(2)-இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

"இது நான்கு இணையத்தளங்களை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மேலும் ஆறு இணையத்தளங்கள் தொடர்பில் மேல்விசாரணை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று சுகாதார அமைச்சு கூறியது.

இது தொடர்பான ஏதேனும் தகவல்கள் மற்றும் புகார்களை 010-8608949 என்ற 'புகைப்பிடித்தல் புகார்' வாட்ஸ்அப் (WhatsApp) வழி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கலாம்.

-- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.