மக்களிடம் பெரும் வரவேற்பு; இலவச உணவு வவுச்சர்களை அதிகரிக்க MBSA பரிசீலனை

30 மே 2026, 6:09 AM
மக்களிடம் பெரும் வரவேற்பு; இலவச உணவு வவுச்சர்களை அதிகரிக்க MBSA பரிசீலனை

ஷா ஆலம், மே 30 – இந்த ஆண்டுக்கான இலவச உணவுத் திட்டத்தின் முதல் நிகழ்வுக்கு மக்களிடையே கிடைத்த அபரிமிதமான வரவேற்பைத் தொடர்ந்து, வவுச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஷா ஆலம் மாநகர் மன்றம் (MBSA) பரிசீலித்து வருகிறது.

செக்சன் 28 உணவு மையத்தில் (Medan Selera Seksyen 28) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தலா ரிம.10 மதிப்புள்ள 300 வவுச்சர்களும் முழுமையாக விநியோகிக்கப்பட்டதாக MBSA துணை மேயர் சஃப்ரியா முகமட் அட்ஸார் தெரிவித்தார். விநியோகம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களிலேயே 100 வவுச்சர்கள் தீர்ந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இத்திட்டத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து, பொருத்தமான இடங்கள் அமைந்தால், வவுச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க MBSA தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“இத்திட்டத்திற்காக 3,000 ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடம் பொருத்தமாக இருந்து, மக்களின் தேவையும் அதிகமாக இருந்தால், 300 வவுச்சர்கள் என்ற எண்ணிக்கையை நாங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,” என இத்திட்டத்தை தொடக்கி வைத்த பின்னர் 'தி ஸ்டார்' நாளிதழிடம் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்கும் அதே வேளையில், MBSA-வின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு மையங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலும் இந்த முன்முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சஃப்ரியா கூறினார்.

அரசு உயர்கல்வி நிறுவன மாணவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் பிரிவினர் என பல தரப்பினரையும் இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

“ஒவ்வொரு பெறுநருக்கும் ரிம.10 மதிப்புள்ள ஒரு வவுச்சர் வழங்கப்படும். இதனை திட்டத்தில் பங்கேற்கும் எந்தவொரு கடைகளிலும் அவர்கள் தங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்றார் அவர்.

செக்சன் 28 உணவு மையத்தில் உள்ள ஆறு உணவு மற்றும் பானக் கடைகள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இந்த முன்னெடுப்பின் மூலம், பெறுநர்கள் வவுச்சர்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட கடைகளில் உணவு வாங்கலாம். வியாபாரிகளிடம் பெறப்படும் வவுச்சர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப MBSA அவர்களுக்குப் பணத்தை வழங்கும். வாங்கும் உணவின் விலை ரிம.10-ஐ விட அதிகமாக இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டும்.

இதற்கிடையே, 2026-ஆம் ஆண்டிற்கான முதல் நிகழ்வாக இத்திட்டம் ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளதாக MBSA துணைச் செயலாளர் (நிர்வாகம்) ஷாரின் அகமட் தெரிவித்தார். இதற்கு முன், இதே போன்ற திட்டம் ஆண்டுக்கு மூன்று முறை செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ஷா ஆலாமின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள செக்சன் 28-ஐ நாங்கள் தேர்வு செய்தோம். இனிவரும் காலங்களில், மாநகரின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்,” என அவர் கூறினார்.

மக்கள் தொகை அடர்த்தி, தொழிற்சாலை பகுதிகளுக்கு அருகாமையில் இருப்பது மற்றும் மாணவர் சமூகம் வசிக்கும் பகுதி ஆகிய பல காரணிகளின் அடிப்படையில் நிகழ்ச்சிக்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.

தொழிற்சாலைகள் மற்றும் குறைந்த விலை வீடமைப்புப் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள அதன் முக்கியத்துவத்தின் காரணமாகவே செக்சன் 28 உணவு மையம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.