ஷா ஆலம், மே 9 — சித்தியா ஆலம் பகுதியில் செயல்பட்டு வந்த நான்கு அழகு நிலையங்கள், உரிமம் இன்றி இயங்கியதாக கண்டறியப் பட்டதையடுத்து, ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (MBSA) மற்றும் காவல்துறை இணைந்து நேற்று இரவு மேற்கொண்ட ஒருங்கிணைந்த அமலாக்க நடவடிக்கையின் போது மூட உத்தரவிட்டனர்.
இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில், செக்க்ஷன் U13-இல் உள்ள ஜாலான் பிரிமா சித்தியா ஆலம் சுற்றுவட்டார-த்தில் அமைந்த ஆறு வளாகங்கள் பரிசோதிக்கப் பட்டன.
ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (MBSA) வெளியிட்ட அறிக்கையில், மூடல் நடவடிக்கைக்கு மேலாக, உரிமம் தொடர்பான பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக மூன்று வளாகங்களின் பொருட்களும் பறிமுதல் செய்யப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
“செல்லுபடியாகும் உரிமம் இன்றி தொழில் நடத்தியதற்காக, MBSA 2013 அழகு மற்றும் சுகாதார பராமரிப்பு மையங்களுக்கான துணை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு MBSA-வின் மூத்த உதவி இயக்குநர் Zakaria Mat Piah தலைமை தாங்கினார். இதில் அமலாக்கம், உரிமம் மற்றும் காவல்துறை உள்ளிட்ட பல துறைகள் இணைந்து செயல்பட்டன.
உரிமம் இல்லாத வளாகங்களின் செயல்பாடுகளை கட்டுப் படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்தும் வகையில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட்டதாக MBSA தெரிவித்துள்ளது.
மேலும், விதிமுறைகளை மீறும் எந்த தரப்பினரிடமும் சமரசம் செய்யாமல், அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப் படும் என்றும் MBSA எச்சரித்துள்ளது.








