ஷா ஆலம், மே 27: பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51A-இல் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த உணவுக் கடைகளை இடித்துவிட்டு, அங்கு வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (KPKT) கீழ் கூடுதல் பாதுகாப்பான, நவீனக் கடைகளை (Kiosks) உருவாக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் (எம்பிபிஜே) முடிவு செய்துள்ளது.
கடந்த மே 19 அன்று ஏற்பட்ட தீ விபத்தில், அங்குள்ள 'கெராய் 51/243' (Gerai 51/243) என்ற வரிசையில் இருந்த எட்டு கடைகளில் ஏழு கடைகள் முற்றாகத் தீக்கிரையாகின. இதனால் அக்கடைகளின் கட்டமைப்பு சுமார் 90 விழுக்காடு வரை கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளதாக மாநகராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்று நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகளுக்குப் பிறகு, அந்த இடத்தில் KPKT-இன் நவீனக் கடைகளை அமைப்பதே மிகவும் பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
"இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் வியாபாரிகள் மற்றும் வருகையாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், இப்பகுதியில் போக்குவரத்து ஓட்டத்தைச் சீரமைக்கவும், சாலைத் தடங்கல்களைக் குறைக்கவும் இது பெரிதும் உதவும். எனவே, தற்போதுள்ள சேதமடைந்த கட்டமைப்புகளை முழுமையாக இடித்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக அதிக பாதுகாப்பு, நவீன மற்றும் முறையான கட்டமைப்பைக் கொண்ட KPKT கடைகளை அமைக்க எம்பிபிஜே முடிவு செய்துள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தீ விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள் மீதான தங்களின் அனுதாபத்தை வெளிப்படுத்தும் விதமாக, எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களுக்கான கடையின் வாடகைத் தொகையை எம்பிபிஜே முற்றிலும் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா மாநகர மேயர் டத்தோ முகமட் ஜஹ்ரி சமிங்கோன் தலைமையிலான அதிகாரிகள் குழு, தீ விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட வியாபாரிகளைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்த பின்னர் இந்த முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கள ஆய்வின் போது, எம்பிபிஜே மண்டலம் 14-இன் மாநகராட்சி மன்ற உறுப்பினர் அசோகன் சுப்ரமணியம், துணை நிர்வாகச் செயலாளர் ஃபவ்சி மாரோப், பொறியியல் துறை இயக்குநர் அகமட் ரோஸ்லான் ஹைருடின் மற்றும் சுகாதாரம்-சுற்றுச்சூழல் சேவைத் துறையின் துணை இயக்குநர் (சுகாதாரம்) மஹ்சுரா முகமட் அமீன் ஆகியோரும் உடனிருந்தனர்.








