ஷா ஆலம், மே 14: பண்டான் இண்டா பகுதியில் உள்ள நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொருட்களை வைத்திருந்த ஒரு வணிக வளாகத்திற்கு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) அபராத நோட்டீஸ் வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கையை நகராண்மை கழகத்தின் உரிமம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறை மேற்கொண்டது.
பண்டான் பெர்டானா காலைச் சந்தை, தாமான் செராஸ் இண்டா மற்றும் பண்டான் இண்டா ஆகிய பகுதிகளில் வணிக உரிம நிபந்தனைகள் மற்றும் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
பண்டான் பெர்டானா காலைச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அங்கு அனுமதியின்றி வியாபாரிகள் யாரும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
சோதனையின் போது வியாபாரி ஒருவர் தனது வணிகத்தை உடனடியாக மூடிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக எம்பிஏஜே தெரிவித்தது. "சம்பந்தப்பட்ட அந்த வியாபாரிக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அவர் மீது வேறு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை," என்று எம்பிஏஜே தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
தாமான் செராஸ் இண்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சிறு வியாபாரிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பது கண்காணிக்கப்பட்டது.
அதே வேளையில், பண்டான் இண்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சோதனை செய்தபோது, அங்கு வணிக உரிமம் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரம் ஆகியவை சரியாக இருந்தன. இருப்பினும், அந்த வளாகத்தின் வெளிப்புற நடைபாதையில் பொதுமக்களுக்கு இடையூறாகப் பொருட்களை அடுக்கி வைத்திருந்ததற்காக அந்த வணிகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இத்தகைய தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகள் அமலாக்கத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், வணிகர்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.








