மோசடி, சூதாட்டம் தொடர்பான 271,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக உள்ளடக்கங்களை நீக்க எம்சிஎம்சி கோரிக்கை

25 மே 2026, 2:11 AM
மோசடி, சூதாட்டம் தொடர்பான 271,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக உள்ளடக்கங்களை நீக்க எம்சிஎம்சி கோரிக்கை

கோலாலம்பூர், மே 25 – சமூக ஊடகத் தள வழங்குநர்களிடம் இருந்து மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) நீக்குமாறு கோரிய 271,472 உள்ளடக்கங்களில் 91 விழுக்காடு இணையவழி மோசடி மற்றும் சூதாட்டம் தொடர்பானவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை ஜனவரி 1, 2026 முதல் நேற்று வரை பதிவு செய்யப்பட்டதாகும் என தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இணையவழி சூதாட்ட உள்ளடக்கங்களில் 81 விழுக்காடு ஃபேஸ்புக்கில் கண்டறியப் பட்டதாகவும், அதே நேரத்தில் 58 விழுக்காடு இணையவழி மோசடி உள்ளடக்கங்களும் அதே தளத்தில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

"கடந்த ஆண்டு, வங்கிகளின் சொந்த பாதுகாப்பு வழிமுறைகள் மூலம், மோசடிக்காரர்களால் திருட முயற்சிக்கப் பட்ட சுமார் 1.2 பில்லியன் ரிங்கிட்டை மலேசியாவில் உள்ள வங்கிகள் வெற்றிகரமாகத் தடுத்துள்ளன என்று பேங்க் நெகாரா மலேசியாவின் துணை ஆளுநர் எனக்குத் தெரிவித்தார்," என்று இன்று இங்கு நடைபெற்ற 'இணையவழி மோசடியை எதிர்ப்பதற்கான இடை-முகமை பயிலரங்கு' 2026-ன் நிறைவு விழாவிற்குப் பிறகு செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மோசடி கும்பல்கள் மலேசியர்களை ஏமாற்றி 2.7 பில்லியன் ரிங்கிட் இழப்பை ஏற்படுத்தியதாகப் பதிவாகியுள்ள நிலையில், இந்தச் சூழல் மிகவும் கவலைக்குரியது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹலிம் ஹம்சா, எம்சிஎம்சி நிர்வாக இயக்குநர் அப்துல் கரீம் ஃபகிர் அலி, குளோபல் ஆன்டி-ஸ்கேம் அலையன்ஸ் (GASA) தென்கிழக்காசிய ஆலோசகர் ராஜேஷ் பால் சிங் சந்து மற்றும் பிரதி போலீஸ் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இணையவழி மோசடி குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் தொடர்ச்சியான முறையில் எதிர்த்துப் போராடுவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, அமலாக்க முகமைகள், ஒழுங்குமுறை அமைப்புகள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைக்க இந்த பயிலரங்கின் விளைவாக முன்மொழியப் பட்டதாக ஃபஹ்மி கூறினார்.

இது தொடர்பான குறிப்பு அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் இக்குழு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் (AI) தவறான பயன்பாடு உட்பட இணையவழி மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் புதிய நுட்பங்களை விரைவாக அடையாளம் காணவும், அமலாக்க நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த முறையில் செயல் படுத்தப்படுவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை முக்கியமானது என்று ஃபஹ்மி கூறினார்.

அந்த நிகழ்வில், எம்சிஎம்சி மற்றும் GASA இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பரிமாறிக் கொள்ளப்படுவதையும் ஃபஹ்மி பார்வையிட்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இணையவழி மோசடியை எதிர்ப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு படியாகும். இது அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்தல், திறன் மேம்பாடு, மற்றும் டிஜிட்டல் மோசடி அச்சுறுத்தல்கள் தொடர்பான பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இந்த ஒத்துழைப்பு, இணையவழி மோசடி அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் நாட்டின் திறனை வலுப்படுத்துவதில் எம்சிஎம்சி-யின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. மேலும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் மீள்திறன் கொண்ட டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை இது ஆதரிக்கிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.