ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

24 மே 2026, 6:45 AM
ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

ஷா ஆலம், மே 24: நேற்று டாமன்சாரா டாமாய், பினாஸ் (FINAS) கோபுரத்திற்கு அருகே உள்ள லெம்பா கிளாங் பாரு நெடுஞ்சாலைக்கு (NKVE) அருகாமையில் உள்ள ஆற்றில் தவறி விழுந்ததாக நம்பப்படும் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

மீட்புக் குழுவினர் 18 மணி நேரத்திற்கும் மேலாக மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, சிறுவன் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்பட்ட இடத்திலிருந்து சுமார் 1.9 கிலோமீட்டர் தொலைவில் அவனது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று மாலை 4.30 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சுங்கை பூலோ தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்களுடன், ஷா ஆலம் நிலையத்தைச் சேர்ந்த நீர் மீட்புக் குழுவினரும் (PPDA) சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

"11 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கியதாக நம்பப்படும் முதற்கட்டத் தகவலைப் காவல்துறையினரிடமிருந்து நடவடிக்கை தலைவர்
பெற்றுக்கொண்டார்.

"தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஆற்றுப் பகுதி முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

முதல் நாளான நேற்று, கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை மேற்பரப்புத் தேடுதல் முறையைப் பயன்படுத்தி தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் கூறினார்.

பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இருட்டியதால் தேடுதல் பணியில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு இரவு 9 மணிக்கு இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

"இன்று காலை 7.30 மணிக்கு மீண்டும் தொடங்கிய தேடுதல் நடவடிக்கையில், பாயா ஜாராஸ் ஹிலிர் பாலத்திலிருந்து மெர்பாவ் செம்பாக் பாலம் வரை ஆற்றங்கரையை ஒட்டி தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டனர்," என்று அவர் தெரிவித்தார்.

காலை 10 மணியளவில், கம்போங் பாரு சுங்கை பூலோவில் உள்ள ஜாலான் வெல்ஃபேர் (Jalan Welfare) பகுதிக்கு அருகிலுள்ள ஆற்றங்கரையில் சிறுவனின் சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்ததாக அகமட் முக்லிஸ் கூறினார்.

"காலை 10.47 மணிக்கு நீர் மீட்புக் குழுவினர் (PPDA) சிறுவனின் சடலத்தை மீட்டனர். பின்னர், காலை 11 மணியளவில் சுகாதார அமைச்சு அதிகாரிகள் சிறுவன் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

"குடும்ப உறுப்பினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்ட பிறகு, மேல் நடவடிக்கைக்காகக்
காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.