காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆடவருக்கு 20 குற்றப் பதிவுகள் உள்ளன

24 மே 2026, 6:19 AM
காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆடவருக்கு 20 குற்றப் பதிவுகள் உள்ளன

ஷா ஆலம், மே 24: நேற்றைய தினம் ஜாலான் சிம்பாங் 3 தாவார், பாலிங் சாலையோரம் உள்ள சீன மயானத்திற்கு அருகே புரோட்டான் வீரா காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டவர் 30 வயதுடைய உள்ளூர் ஆடவர் என்பதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காலை 11.35 மணியளவில் நினைவிழந்த நிலையில் ஆடவர் ஒருவர் இருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக பாலிங் மாவட்டக்
காவல்துறை தலைவர் சூப்பரின்டெண்டன்ட் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாலிங் மாவட்ட காவல்துறை
தலைமையக (IPD) குழுவினர், அந்த வாகனம் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர்.

"காரின் உள்ளே இருந்த ஆடவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சோதனையில் தெரியவந்தது," என்று அவர் வெளியிட்ட ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.

வாகனத்தின் கதவைத் திறந்து உடலை வெளியே எடுப்பதற்காகப் பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய (BBP) வீரர்களும் உதவிக்காக அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
கெடா மாநிலக் காவல்துறை தலைமையகத்தின் (IPK) தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் சோதனைகளை மேற்கொண்டனர்.

"ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த நபர் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் ஆடவர் என்பது தெரியவந்தது. மேலும், இறந்துபோன அவருக்கு குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான 20 முன் குற்றப் பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது," என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த புரோட்டான் வீரா கார் பெண்டாங் பகுதியில் திருடுபோனதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டப்
பிரிவு 379A இன் கீழ் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பிராண்டன் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மேல்
விசாரணைக்காக அந்த வாகனத்தைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார், சுல்தானா பாஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
"இச்சம்பவம் திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது," என்றும் அவர் கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் தாவார் காவல்நிலையத் தலைவர் சார்ஜன்ட் மேஜர் ஹபீட்ஸ் அமீலை 017-5588637 என்ற எண்ணில்
அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.