கோத்தா அங்கிரிக் தொகுதியைச் சேர்ந்த 367 சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பாராட்டு விழா

24 மே 2026, 2:49 AM
கோத்தா அங்கிரிக் தொகுதியைச் சேர்ந்த 367 சிறந்த எஸ்பிஎம் மாணவர்களுக்குப் பாராட்டு விழா

ஷா ஆலம், மே 24: கோத்தா அங்கிரிக் (DUN Kota Anggerik) சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பயின்று, 2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சி பெற்ற 367 மாணவர்கள் நேற்றைய தினம் நடைபெற்ற விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதியின் சேவை மையங்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த சிறப்புப் பாராட்டு விழாவிற்காகச் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மாநில இளைஞர் மேம்பாட்டுக் குழுவின் நிர்வாக உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.

ஷா ஆலம் சுற்றுவட்டாரப் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளை விட இந்த முறை ஒட்டுமொத்த தேர்ச்சியில் மிகச் சிறந்த சாதனையைப் பதிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அங்கீகரிக்கும் வகையில் இத்தகைய பாராட்டு விழா நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று அவர் குறிப்பிட்டார்.

அனைத்து மாணவர்களும் எஸ்பிஎம் தேர்வில் 7A முதல் 11A வரை அள்ளிக்குவித்து சாதனை படைத்தவர்கள் என்றும், தங்களின் உயர்கல்விப் பயணத்தைத் தொடரும்போது அவர்கள் இன்னும் பல சாதனைகளைப் படைக்க இந்த ஊக்கத்தொகை திட்டம் ஒரு பெரும் தூண்டுகோலாக அமையும் என நம்புவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் விவரித்தார்.

மேலும், கோத்தா அங்கிரிக் தொகுதியின் மக்கள் பிரதிநிதியுமான முகமட் நஜ்வான் ஹலிமி, சாதனை மாணவர்களின் விவரங்களைத் திரட்டி வழங்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய பெட்டாலிங் பெர்டானா மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குத் தனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

எதிர்வரும் காலங்களில் ஏதேனும் சிறப்புப் பயிற்சிகள் அல்லது பயிலரங்குகள் நடத்தப்பட்டால், இந்த மாணவர்களுக்குக் வாய்ப்பு வழங்கும் நோக்கில் அவர்களையும் அதில் சேர்க்க முயற்சிப்போம் என்றும், அடுத்தடுத்து எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களையும் பள்ளி ரீதியிலான ஊக்குவிப்புத் திட்டங்களையும் தொடர்ந்து வழங்க உள்ளதாக அவர் உறுதி கூறினார்.

இதற்கிடையில், கடந்த 2024-ஆம் ஆண்டின் தேசிய சராசரி தரம் (GPK) 4.49 ஆக இருந்த வேளையில், 2025-ஆம் ஆண்டின் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் 4.42 என்ற புள்ளியைப் பதிவு செய்து, நாட்டின் மிகச் சிறந்த கல்வித் தேர்ச்சியாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 3 லட்சத்து 55 ஆயிரத்து 933 வேட்பாளர்கள் மட்டுமே எஸ்பிஎம் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றிருந்த நிலையில், 2025-இல் 3 லட்சத்து 66 ஆயிரத்து 435 வேட்பாளர்கள், அதாவது 94.29 விழுக்காட்டினர் சான்றிதழ் பெறத் தகுதி பெற்றுள்ளதாகக் கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ஆசாம் அகமட் முன்னதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.