ஷா ஆலம், மே 22: கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்போங் மெலாயு பத்து 16, ஜாலான் செபகாட் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்குள்ள சுங்கை செபகாட் ஆற்றில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, ஆற்றினை ஆழப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் நிலவரத்தை ஆராய்ந்த பின்னர், இதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தாமான் டெம்ப்ளர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் பெய்த தீவிர மழையினாலும், சுங்கை செபகாட் ஆற்றில் மரக்கட்டைகள் சிக்கி நீரோட்டத்தைத் தடை செய்ததாலுமே இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று அவர் விளக்கமளித்தார்.
வெள்ள நீர் வடிந்துவிட்ட போதிலும், இன்னும் சில வீடுகள் சேறும் சகதியுமாகவே காட்சியளிப்பதாகவும், பொதுமக்கள் தங்களது உடைமைகளைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தனது முகநூல் பதிவின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், சிலாங்கூர் மாநில நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை (JPS) மற்றும் மாவட்ட நில அலுவலகம் (PDT) ஆகிய முகமைகள் சம்பந்தப்பட்ட பகுதியின் மேம்பாலம் மற்றும் மதகுகளின் நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
அதே வேளையில், செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (MPS) பொறியியல் துறையைச் சேர்ந்த கண்காணிப்புப் பிரிவினர், ஆபத்தான நிலையில் உள்ள சரிவுகளை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 'தெரத்தாக் தோக் வான்' பகுதிக்கு அருகில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அன்ஃபால் சாரி, இது குறித்துச் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஆலோசித்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து முகமைகளுடனும் தாம் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன் என்றும், ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகளும் முழுமையாகச் செய்து முடிக்கப்படுவதை தாம் நேரில் கண்காணித்து உறுதி செய்யப் போவதாகவும் அவர் மேலும் கூறினார்.








