ஷா ஆலம், மே 19 – இங்குள்ள அனாக் சுங்கை டாமன்சாரா (Anak Sungai Damansara) பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புத் திட்டம் (RTB) எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்கட்டமைப்புக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த 8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான திட்டம் தற்போது மிகச் சீரான முறையில் இயங்கி வருவதோடு, இதுவரை தோராயமாக 97 விழுக்காடுப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.
இன்று அனாக் சுங்கை டாமன்சாரா வெள்ளத்தடுப்புத் திட்டப் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், இத்திட்டம் மிகவும் தடையின்றி நகர்வதாகவும், இது தங்களின் முக்கிய வெற்றிகளில் ஒன்று என்றும் மகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட கால அட்டவணையின்படி பணிகளை முடிப்பதை உறுதி செய்த ஒப்பந்ததாரருக்குத் தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் இந்த வெள்ளத்தடுப்புத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வருவதை இலக்காகக் கொண்டுள்ளோம் என அவர் கூறினார். தற்போது எஞ்சியிருக்கும் பணிகளில் மின்சார விநியோக இணைப்பு மட்டுமே பாக்கி உள்ளதாகவும், அது முடிந்தவுடன் இந்தத் திட்டம் முழு வீச்சில் இயங்கும் என்றும் விளக்கமளித்தார்.
இந்தத் திட்டம் குறித்து மேலும் விவரித்த இஷாம், இந்த வெள்ளத்தடுப்புத் திட்டப் பகுதியில் வினாடிக்கு 2,000 கன மீட்டர் நீரை வெளியேற்றும் திறன் கொண்ட பம்ப் ஹவுஸ் (Rumah Pam) அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அதோடு, மிதந்து வரும் குப்பைகளைத் தானாகவே ஈர்த்து அப்புறப்படுத்தும் நவீன வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அதிநவீன உள்கட்டமைப்பு வசதியின் மூலம், இங்குள்ள தாமான் இந்தான் (Taman Intan) பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வந்த திடீர் வெள்ளப் பிரச்சனைக்குச் சிறந்த தீர்வு காண முடியும் என்று தாங்கள் முழுமையாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வெள்ளத்தடுப்புத் திட்டம் முழுமையாக நிறைவடைவதன் மூலம், இப்பகுதியில் திடீர் வெள்ள அபாயம் பெருமளவில் குறைக்கப்படும் என்றும், இதன் வழி உள்ளூர்வாசிகளின் நீண்டகால கவலையும் அச்சமும் முற்றாகத் தீரும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளதாகவும் டத்தோ இஷாம் ஹாஷிம் உறுதியளித்தார்.









