மத்திய கிழக்கு நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தனது தயார்நிலையை வலுப்படுத்துகிறது

21 மே 2026, 8:10 AM
மத்திய கிழக்கு நெருக்கடியின் தாக்கத்தை எதிர்கொள்ள சிலாங்கூர் தனது தயார்நிலையை வலுப்படுத்துகிறது

ஷா ஆலம், மே 21: தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையை வலுப்படுத்தும் வகையில், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் சிலாங்கூர் மாநில அரசு ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடிய மத்திய கிழக்கு நெருக்கடியின் நிலவரங்களைத் தொடர்ந்து, அபாயங்களைக் கண்காணித்தல், பொருளாதாரத் தணிப்பு, விநியோகப் பாதுகாப்பு மற்றும் மூலோ பாயத் தொடர்பாடல் ஆகியவை இந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று மாநிலச் செயலாளர் டத்தோ டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அஹ்மட் தாஜுடின் தெரிவித்தார்.

விநியோகச் சங்கிலி, பொருட்களின் விலை, தொழில்துறை, முதலீடு மற்றும் மக்களின் நல்வாழ்வு ஆகியவை இதனால் பாதிக்கப்படக்கூடிய துறைகளில் அடங்கும் என்று அவர் கூறினார்.

"தற்போதைய புவிசார் அரசியல் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்கான தயார் நிலையை வலுப்படுத்துவதற்காக, சிலாங்கூர் மாநிலத்தின் மத்திய கிழக்கு நெருக்கடியைக் கையாளுவதற்கான பிரதானக் குழு மற்றும் சிறப்புச் செயல் படையின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாவது கூட்டம் இன்று நடைபெற்றது," என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவு, தொழில்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (PMKS) மீதான சாத்தியமான தாக்கங்கள் உட்பட மாநிலத்தின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த பகுப்பாய்வைச் சிலாங்கூர் ஆராய்ச்சி நிறுவனம் (SRI) அக்கூட்டத்தில் சமர்ப்பித்ததாக அவர் கூறினார்.


இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியால் அறிவிக்கப்பட்ட 141 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 'சிலாங்கூர் மீள்திறனை வலுப்படுத்தும் தொகுப்பு' (Pakej Pengukuhan Daya Tahan Selangor) திட்டத்தை மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

சவாலான உலகளாவிய பொருளாதாரச் சூழலில் மக்களின் நல்வாழ்வு, தொழில்துறையின் தொடர்ச்சி மற்றும் மாநிலப் பொருளாதாரத்தின் நிலைத்தன்மை ஆகியவை தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதே இம்முயற்சியின் நோக்கமாகும் என்று டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி கூறினார்.

வருகிற ஜூன் 15 ஆம் தேதி தொடங்கவுள்ள முதற்கட்ட செயலாக்கங்களில் கீழ்க்கண்டவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார்:

1) ஜுவாலான் ஏசான் ரஹ்மா
(மலிவு விலை விற்பனை - JER)
2) கித்தா சிலாங்கூர் பற்றுசீட்டுகள்
(Baucar KitaSelangor)
3) பொதுப் போக்குவரத்து கட்டண மானியம்
4) விவசாயத் துறைக்கான ஆதரவு உதவி
5) சிலாங்கூர் கூட்டுறவுத் தொழில்முனைவோர் மேம்பாடு
6) சிலாங்கூர் உணவுப் பண்டகசாலை
(Gudang Makanan Selangor)

நிச்சயமற்ற அனைத்துலகப் புவிசார் அரசியல் நிலவரங்களைத் தொடர்ந்து, தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற தன்மை 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என மாநில அரசு கணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"இதன் காரணமாக, மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மை தொடர்ந்து பாதுகாக்கப் படுவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசின் அனைத்துத் துறைகள், ஏஜென்சிகள் மற்றும் துணை நிறுவனங்கள் தங்களது தயார் நிலையை அதிகரிக்கவும், விவேகமான முறையில் செலவு செய்யவும் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன," என்று அவர் கூறினார்.

மாநில அரசு தற்போதைய நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும், எடுக்கப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு நேரடியாக பயனளிப்பதை உறுதி செய்வதற்கும், அதேவேளையில் மாநிலத்தின் பொருளாதார மீள் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும் உறுதியளித்துள்ளது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.