புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க சிலாங்கூர் அரசு திட்டம்: 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

19 மே 2026, 2:54 AM
புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்க சிலாங்கூர் அரசு திட்டம்: 2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

பெட்டாலிங் ஜெயா, மே 19: சிலாங்கூர் மாநிலத்தில் புதிய தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குவதற்காக, இரண்டு மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இலக்கிய வகுப்புகளை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் எழுத்தாளர்கள் தங்களின் புதிய திறமைகளை மெருகேற்றிக் கொள்ளவும், இத்திட்டத்தில் பங்கேற்பாளர்களுக்குத் தேவையான நிதி ஆதரவை வழங்கவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு சன்வே ரிசார்ட் ஹோட்டலில் நடைபெற்ற 'எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் சந்திப்பு' (Town Hall) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பான திட்ட அறிக்கையை சிலாங்கூர் பொது நூலகக் கழகத்துடன் (PPAS) இணைந்து தாம் விரிவாக ஆய்வு செய்யவிருப்பதாகக் கூறினார்.

இந்தத் திட்டத்தை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ், இளம் எழுத்தாளர்கள் அனுபவம் வாய்ந்த மூத்த எழுத்தாளர்களின் வழிகாட்டுதலோடு தரமான படைப்புகளை உருவாக்குவார்கள் என்று அமிருடின் விளக்கினார்.

இத்தகைய ஆதரவின் மூலம், இந்த ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சுவாரசியமான புதிய படைப்புகளை எங்களால் வெளியிட முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மக்களின் குரலைத் தாங்கி நிற்கும் தரமான இலக்கியப் படைப்புகளை உருவாக்குவதற்காக மாநில அரசு மேற்கொண்டு வரும் தொடர் முயற்சியின் ஒரு பகுதிதான் இது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, இலக்கியம் மற்றும் எழுத்துலகின் மேம்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியை அவர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இதில் 7 தேசிய இலக்கியவாதிகள் (National Laureates) மற்றும் 19 உள்ளூர் எழுத்தாளர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேராசிரியர் எமரிட்டஸ் முஹம்மது சல்லே, டத்தோ அன்வர் ரித்வான், டததோ ஜுரினா ஹசான், பேராசிரியர் டத்தோ சித்தி சைனோன் இஸ்மாயில் மற்றும் டத்தோ ரஹ்மான் ஷாரி உள்ளிட்ட பல முக்கிய தேசிய இலக்கியப் பேரறிஞர்கள் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இலக்கியத் துறையை மேம்படுத்துவதற்கான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்தது என்று அமிருடின் கூறினார். எழுத்துலகின் மாமேதைகள் பலர் இதில் கலந்துகொண்டதால் இது மிகவும் பயனுள்ள ஒரு சிந்தனை அமர்வாகவும், சிறந்ததோர் அனுபவமாகவும் அமைந்தது என்றும், எதிர்காலத்தில் இதன் மூலம் பல நுண்ணறிவுமிக்க யோசனைகளை முன்மொழிய முடியும் என்றும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.